Enable Javscript for better performance
இணையதளம் மூலம் வாகனப் பதிவு: புதுவை மாநிலம் முழுவதும் விரிவாக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இணையதளம் மூலம் வாகனப் பதிவு: புதுவை மாநிலம் முழுவதும் விரிவாக்கம்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகனங்களை இணையதளம் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்யும் நடைமுறை புதுவை மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.
    புதுவை அரசுப் போக்குவரத்துத் துறையில் அனைத்துச் சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இணையதளம் மூலமாக ஆவணங்களைச் சமர்ப்பித்து, வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதற்காக வாகன் 4.0 என்னும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன.
    இந்த நடைமுறை நாட்டிலேயே முதல்முறையாக புதுவை  மாநிலம், காட்டுக்குப்பத்தில் 27.1.2017 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து, திருபுவனையில் 28.6.2017 அன்றும், உழவர்கரையில் 12.2.2018 அன்றும், மாஹேவில் 12.3.2018 அன்றும், ஏனாமில் 5.3.2018 அன்றும், காரைக்காலில் 18.4.2018 அன்றும் அமல்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் அமல்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதன்மூலம், புதுவை மாநிலத்தில் இணையதளம் மூலம் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறை முழுமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இந்த நடைமுறையைத் தொடக்கிவைத்து பேசியதாவது:
    இணையதளம் மூலமாக வாகனங்களைப் பதிவு செய்யும் முறை புதுவை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இந்த நடைமுறையால் ஆவணங்களை நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆவணங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதற்குரிய பதிவெண் வழங்கப்பட்டுவிடும். இந்தச் செயலி மூலம் தற்காலிக அனுமதிச் சான்றைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் புதுவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் பிற மாநில போக்குவரத்துத் துறை அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு விடும் என்றார் அவர்.
    விழாவில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai