Enable Javscript for better performance
ஐசிடி அகாதெமி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஐசிடி அகாதெமி சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்த முகாம் தொடக்க விழாவுக்கு புதுவை வருவாய், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார்.  மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் 
    எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன்,  செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. கோபிகா, புதுவை தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் வரவேற்றார். நிகழ்வில், அமைச்சர்  ஷாஜகான் பேசியதாவது:  சிறந்த மனிதவளம் உள்ள புதுவை மாநிலத்தில் கல்லூரி படிப்பு முடிக்கும் மாணவர்கள் பல்வேறு சிறந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    அதற்கான பயிற்சிகளும் துறை வல்லுநர்கள் மற்றும்  சி.ஐ.ஐ. ஆகியவற்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு ஐசிடி அகாதெமி மூலம் வழங்கப்படுகிறது.  வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை பெறுவோர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட  நிகழாண்டு 69 சதவீதம் அதிகரித்துள்ளது.
    வருங்காலத்தில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சென்னை, புதுவையைச் சேர்ந்த ஐ.டி., பிற துறைகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தேர்வு செய்தன.
    முகாமில் புதுவை மாநிலத்தின் அரசு, தனியார் பொறியியல்கள், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 2,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை ஐசிடி அகாதெமி முதுநிலை மேலாளர் அழகிரி, கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai