Enable Javscript for better performance
தனியார் நிறுவனங்கள் லாபத்தில் 3 சதவீதத்தை  முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவனங்கள் லாபத்தில் 3 சதவீதத்தை  முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 3 சதவீதத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
    சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், புதுவையில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், தேசிய வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது:
    மக்களுக்கான பல்வேறு சமூக நலத் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது.  குறிப்பாக, சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது, தனியார் ஜவுளிகள், நகை வியாபார நிறுவனங்களின் கிளைகள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டு வருகின்றன.  இதனால், புதுச்சேரி சிறந்த வியாபார மையமாக உருவெடுத்து வருகிறது.
    எனவே, சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் மொத்த லாபத்தில் 3  சதவீதத்தை அந்தந்தப் பகுதியில் சமூக மேம்பாட்டுக்குச் செலவிட வேண்டும்.  ஆனால், புதுச்சேரியில் உள்ள நிறுவனங்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயே இந்தத் திட்டத்துக்கு நிதியை அளித்து வருகின்றன.
    குளோபல் நிறுவனம் 80 பொலிவுறு வகுப்பறைகளை (ஸ்மார்ட் வகுப்பறை) அரசுப் பள்ளிகளில் அமைத்துத் தந்துள்ளது. அதுபோல, பல்வேறு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகளை அமைப்பது, கழிப்பறைகளைக் கட்டித் தருவது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
    நீரிழிவு நோய், விபத்துகளினால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு சமூகச் சேவைகளை ஆற்ற முதல்வர் நிவாரண நிதிக்கு தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி. இந்தக் கூட்டத்தில் புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார்,  தலைமை செயலர் அஸ்வனி குமார்,  வளர்ச்சி ஆணையர் அன்பரசு,  மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவாத், எண்ணெய் நிறுவனங்கள், தேசிய வங்கிகளின் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai