Enable Javscript for better performance
பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி பள்ளி,  கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று புதுவை மனித உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.
     இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    தமிழகப் போக்குவரத்துத் துறை பள்ளி, கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பு கோடை விடுமுறையில் பேருந்துகளை ஆய்வுக்கு உள்படுத்திய பின்னரே இயக்க அனுமதித்து வருகிறது. பேருந்துகள் மட்டுமன்றி,  ஆட்டோக்கள்,  வேன்கள் உள்ளிட்ட மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன.
    இதே நடைமுறை புதுச்சேரியிலும் சில ஆண்டுகள் பின்பற்றப்பட்டது.  கடந்த ஆண்டு பேருந்துகளுக்கு மட்டும் உரிமச் சான்று பார்க்கப்பட்டது.  அதுவும் முழுமையாகப் பார்க்கப்படவில்லை.
     மேலும் ஆட்டோ,  வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலும் ஆய்வு ஏதும் மேற்கொள்ளாமல் தவிர்க்கப்பட்டது. நிகழாண்டு எந்த வாகனமும் ஆய்வு செய்யப்படவில்லை. இதனால், பள்ளிப் பேருந்துகளின் இயக்க நிலை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் வாகன உரிமச் சான்றுகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டியது அத்தியாவசிமாகும்.
     பேருந்துகள் மட்டுமன்றி,  தனியார் பள்ளி,  கல்லூரிப் பேருந்துகள், மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களையும் உடனடியாக ஆய்வுக்கு உள்படுத்தி இயக்கத் 
    தகுதியான வாகனங்களுக்கு மட்டும் எந்தவித முறைகேடும் இன்றி, உரிமச்  சான்றிதழ் வழங்க வேண்டும்.  இந்தச் சான்றிதழ்களை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பில் ஒட்டவும் உத்தரவிட வேண்டும்.   அவ்வாறு உரிமச் சான்றிதழ் ஒட்டாத வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.  இதை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், பள்ளி தொடங்கும் நாளில் போக்குவரத்துத் துறையின் உரிமச் சான்றிதழ்  ஒட்டப்படாத வாகனங்களை மறித்துப் போராட்டம் நடத்துவோம் என அந்த அறிக்கையில் 
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai