புதுவை பேரவையைச் சுற்றி ஜூன் 4 முதல் 28 வரை தடை உத்தரவு
By DIN | Published on : 02nd June 2018 09:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவை சட்டப்பேரவையைச் சுற்றி ஜூன் 4-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவை ஜூன் 4-ஆம் தேதி கூடுகிறது. கடந்த முறை சட்டப்பேரவைக் கூடிய போது, பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் உயர் நீதிமன்ற உத்தரவு நகலை காட்டி, சட்டப்பேரவைக்குள் நுழைய முயற்சித்து போராட்டம் நடத்தினர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. அப்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அந்தக் கட்சித் தொண்டர்கள் யாரும் பேரவையைச் சுற்றி கூடி நின்று போராட்டம் நடத்த முடியவில்லை.
நியமன எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது நீதிமன்ற உத்தரவு இல்லையென்றாலும், பாஜகவினர் சட்டப்பேரவைக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களுடன் பாஜக தொண்டர்களோ, அவர்களைத் தடுக்கும் நோக்கில் பிற கட்சித் தொண்டர்களோ கூடினால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் பரிந்துரையின் பேரில், புதுவை காவல் துறை தடை உத்தரவை செயல்படுத்த முடிவு செய்தது.
இதுகுறித்து புதுவை காவல் துறை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், சங்கங்கள் நடத்தும் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தனி நபர், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டு, அமைதிக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதுவை காவல் துறை கிழக்குப் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஜூன் 4 -ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டம் நடத்துவதற்கு குறைந்தது 2 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். இந்தத் தடை உத்தரவு திருமணம், மதச் சடங்குகள், இறுதிச் சடங்கு மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது என என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.