Enable Javscript for better performance
பேரவை கூட்டத் தொடரில் ஆட்டோ நல வாரிய அறிவிப்பை வெளியிட திமுக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பேரவை கூட்டத் தொடரில் ஆட்டோ நல வாரிய அறிவிப்பை வெளியிட திமுக கோரிக்கை

    By DIN  |   Published on : 02nd June 2018 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆட்டோ நல வாரியம் தொடர்பான  அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    இதுகுறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமியிடம் வியாழக்கிழமை அவர் அளித்த மனுவின் விவரம்:
    ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் எதிர்காலம் சிறக்க  அவர்களுக்கான நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் திமுக சார்பில் நான் வைத்தேன். அதற்கு தாங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அப்போது அறிவித்தீர்கள். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் நல வாரியம் அமைக்கப்படவில்லை. இது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஆகையால், எதிர்வரும் கூட்டத் தொடரில் ஆட்டோ நல வாரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
    இந்த நல வாரியம் அமைக்கப்பட்டால், வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள் கடைகளை அமைத்து, ஆட்டோக்களுக்கான உதிரிப் பாகங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றை மானிய விலையில் கிடைக்க வழிவகை செய்யலாம். மேலும், ஆட்டோ தொழிலாளர்களின் பிள்ளைகள் மேற்படிப்பு பயிலவும், வீடுகள் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கலாம். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி, சுற்றுலா மேம்படவும் வழிவகை காணலாம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    மனு அளிப்பின் போது, மாநில திமுக பொருளாளர் சண்.குமரவேல்,  தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம்,  கெளரவத் தலைவர் சக்திவேல்,  மாநில ஆட்டோ சங்கத் தலைவர் முரளி,  செயலர் மிஷேல்,  பொருளாளர் சிவலிங்கம், ஆட்டோ சங்க நிர்வாகிகள்,  உறுப்பினர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai