Enable Javscript for better performance
ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட  500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட  500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    தமிழகம், புதுவையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.  இதனால், சந்தைகளில்  நன்கு பழுத்து இருக்கும் மாம்பழங்களை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கிச் செல்கின்றனர். அந்தப் பழங்களைச் சாப்பிட்ட பின் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்படுகிறது.   இதற்குக் காரணம் அந்தப் பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதுதான்.
    அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு மாங்கனிகள் நன்கு பழுக்கும் முன்பே வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகின்றனர்.  
    முதிர்ச்சியடையாத காய்கள் பழுக்காது என்பதால், கார்பைடு கல் வைத்து வியாபாரிகள் பழுக்க வைக்கின்றனர். இந்தப் பழங்களை உண்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
    இதனிடையே வெள்ளிக்கிழமை காலை உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரிகள் குபேர் சந்தை பகுதியில் மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  3 மணி நேரம் நடைபெற்ற ஆய்வில் 500 கிலோ கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி தன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் இந்தப் பழங்களைப் பறிமுதல் செய்தனர்.
    இதுபோன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும், தொடர்ந்து இவ்வாறான செயல்களில் வியாபாரிகள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் எச்சரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai