Enable Javscript for better performance
கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் பள்ளிகள் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியைப் போக்குவரத்துத் துறையினர் சனிக்கிழமை தொடங்கினர்.
    புதுவையில் அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஆண்டுதோறும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு முன்பு அவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள், ஆட்டோக்களை போக்குவரத்துத் துறையினர் ஆய்வு செய்வது வழக்கம்.
    நிகழாண்டு பள்ளி, கல்லூரிகளுக்குச் சொந்தமான பேருந்து, வேன்களை கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையில், இதுவரை அவற்றை ஆய்வுக்கு உள்படுத்தப்படாதது குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஜூன் 2, 3-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்தது.
    அதன்படி, மேட்டுப்பாளையம் சரக்கூர்தி முனையம் அருகிலுள்ள வட்டாரப் போக்குவரத்துத் துணை ஆணையர் அலுவலகத்தில் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. 
    முதல் நாளில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
    போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ரகுநாத், சீத்தாராம ராஜூ, பிரபாகர் ராவ் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணியை தனித் தனியாக மேற்கொண்டனர்.
    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன்களில் முதலுதவிப் பெட்டிகள் உள்ளதா, தீயணைப்புக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளனவா, இருக்கை வசதி, வாகனத்தின் பிரேக் தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. 
    மேலும் காப்பீடு, வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
    குறைபாடு இருந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அவற்றை ஒருவார காலத்துக்குள் சரி செய்து கொண்டு வர உத்தரவிடப்பட்டது. அனைத்து வசதிகளும் கொண்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்துத் துறையினர் அனுமதி வழங்கியதற்கான வில்லைகளை அதிகாரிகள் ஒட்டினர்.
    மேலும், சிறப்பு முகாமில் பங்கேற்று அனுமதி பெற முடியாத வாகனங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்று பரிசோதனை முடித்து சிறப்பு அனுமதியைப் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai