Enable Javscript for better performance
பண மோசடி: புதுச்சேரியில் மேலும் மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில், மேலும் 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 1.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக பலரது வங்கிக் கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் பணம் எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதல் கட்டமாக, ஸ்கிம்மர் என்னும் கருவி மூலம் ஏ.டி.எம். அட்டை எண்கள் திருடப்பட்டு, போலி ஏ.டி.எம். அட்டைகளை உருவாக்கி, அதன் மூலம் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
    இதையடுத்து, பணம் திருடப்பட்ட நேரத்தை ஏ.டி.எம். கண்காணிப்புக் கருவிகளின் பதிவை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பொறியியல் பட்டதாரி பாலாஜி, மருத்துவர் விவேக் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    அவர்கள் அளித்த தகவலின் பேரில், தலைமறைவான அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    இதனிடையே, இந்த வழக்கில் உருளையன்பேட்டையில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வரும் குருமாம்பேட்டையைச் சேர்ந்த கணேசன் (33), புதுச்சேரி மாகாத்மா காந்தி வீதியில் விளையாட்டு உபகரணங்கள் கடை வைத்திருக்கும் ரெட்டியார்பாளையம் மூலக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் (30), கொசக்கடை வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் லாசுப்பேட்டை சாந்தி நகரைச் சேந்த டேனியல் சுந்தர் சிங் (33) ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ரகீம் தலைமையில் போலீஸார் அந்த 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் முக்கிய எதிரியான சந்துருஜிக்கு தங்களுடைய கடைகளில் வைத்திருக்கும் பண அட்டை இயந்திரத்தைக் கொடுத்து, அதில் பதிவாகியிருக்கும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். அட்டை எண்கள், ரகசியக் குறியீட்டு எண்களைக் கொடுத்து, அதன் மூலம் அவர்கள் 10 சதவீதத் தொகையைப் பெற்றது தெரிய வந்தது.
    இதனிடையே, முக்கிய எதிரிகளான சந்துருஜி, சத்யா ஆகிய இருவரையும் கைது செய்தால் மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்த முழு உண்மை தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai