Enable Javscript for better performance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமே பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருக்கும்: முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமே பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருக்கும்: முதல்வர் நாராயணசாமி

    By DIN  |   Published on : 03rd June 2018 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று புதுவை முதல்வர் வே.நாரயணசாமி தெரிவித்தார்.
    புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றல் குழு உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
    மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், எவ்வித அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முயற்சி எடுத்தது. மத்திய அரசின் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான வரைவுத் திட்டத்தை தமிழக அரசு அப்படியே ஏற்றுக் கொண்ட போதிலும், புதுவை அரசு அதை ஏற்கவில்லை.
    மாறாக, மத்திய அரசு கொண்டு வந்த வரைவுத் திட்டத்தை செயல்படுத்தினால், மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, மீண்டும் மத்திய அரசைத்தான் அணுக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், 
    மத்திய அரசிடமே மீண்டும்  அதிகாரம் இருக்கும். 
    எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீரை பெற்றுத் தரக்கூடிய முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்க வேண்டும் என புதுவை அரசு சார்பில் வழக்குரைஞர் நம்பியார் மூலம் வலியுறுத்தினோம்.
    இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன், புதுவை அரசுக்கு நன்றியும் தெரிவித்தது. இவ்வாறு புதுவை அரசு வலியுறுத்தவில்லை என்றால், மத்திய அரசுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டு, நீரைப் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படும். மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கும்.
    கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டால் 
    பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என்று தெரிகிறது.
    தற்போது மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். வருகிற 2019-இல் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமையும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
    மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் கையாளும் முறை தவறானதாகும். காங்கிரஸ் ஆட்சியில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலையை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் இதை 15 நாள்களுக்கு ஒருமுறை என்றும், பின்னர் நாள்தோறும் என்றும் மாற்றி அமல்படுத்தினார். 
    இதனால், திடீர் திடீரென ஏறும் பெட்ரோலின் விலை, அவ்வப்போது, ஒரு பைசா, 4 பைசா, 6 பைசா என குறைக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
    காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. தற்போது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருந்த போதும், காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசலின் விலையை குறைந்த விலைக்கு விற்றது.
    ஆனால், தற்போது 85 டாலராகத்தான் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை உள்ளது. இருப்பினும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 82-க்கும், டீசல் ரூ. 73-க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக மத்திய அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது பொதுமக்களைச் சென்றடைய வேண்டிய தொகை. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்விக்கு பெட்ரோல், டீசல் விலை மட்டுமே காரணமாக இருக்கும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai