Enable Javscript for better performance
பாசிக் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஏஐடியுசி கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பாசிக் ஊழியர்களுக்கு வேளாண் துறை மூலம்  ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
    ஏஐடியூசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் முதலியார்பேட்டை சங்க  தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
    சங்கச் செயலர் முத்துராமன் தலைமை வகித்தார்.  ஏஐடியுசி மாநிலத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் பேசியதாவது:
    பாசிக்கில் 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களுக்கு 43 மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.  இதனால் அவர்களது குடும்பங்கள் மிகவும் வறுமையில் உள்ளன.  எனவே, அரசு நிலுவையில் உள்ள ஊதியத்தை காலம் கடத்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    பாசிக் நிறுவனத்தில் தினக்கூலி ஊழியர்களாக கடந்த 18 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்டோர்  பணிநிரந்தரம் செய்யாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  
    அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை தினமும் ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். 
    பாசிக் நிறுவனம் கடந்த காலங்களில் நல்ல லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வந்தது. 
    வரக்கூடிய வருவாயில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியது போக அரசுக்கு ஈவுத் தொகையாக ஆண்டுதோறும் பல லட்சங்கள் வழங்கப்பட்டன. 
     இங்கு உள்ள அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்த நிறுவனம் தற்போது சொந்தக் காலில் நிற்க முடியாத நிலையில் உள்ளது.   இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    பாசிக் நிறுவனம் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் 37 உழவரகங்கள் நடத்தி வருகிறது.  இதில் 125-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
    இவர்களுக்கு வேளாண்துறை மூலம் ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அபிஷேகம்.
     கூட்டத்தில் சங்கத்தின் கெளரவத் தலைவர் கே.சேதுசெல்வம்,  பாசிக் ஊழியர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஏ.அப்துல்லகான்,  பொதுச்செயலர் கே.முத்துராமன்,  பொருளாளர் எஸ்.தரணிராஜன்  உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai