Enable Javscript for better performance
புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் 300 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் 300 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 04th June 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் 300 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    புதுச்சேரி முத்தியால்பேட்டை புனித ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் சரவணன் பாபு (45).  புதுவை மாநில எல்லையில் விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி உஷா, மகன் கெளசிக் பாபு (13), மகள் தீஷிதா (7).
    மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டக்குப்பம் பகுதியில் குடியேறினார். அங்கு இவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.
    முத்தியால்பேட்டை வீட்டில்  குடியிருக்கும் இவர், தனது குடும்பத்துடன் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இரவு கோட்டக்குப்பத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முத்தியால்பேட்டைக்கு திரும்புவது வழக்கம்.
    கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சரவணன் பாபு குடும்பத்தினருடன் கோட்டக்குப்பம் சென்றார். 
    ஞாயிற்றுக்கிழமை காலை முத்தியால்பேட்டை வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டார். 
    உள்ளே சென்று பார்த்த போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 லட்சம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    புகாரின்பேரில்,   முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிசிடிவி ஹார்டு டிஸ்க்கள் மாயம்: சரவணன் பாபு வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, இரும்புக் கதவுகள் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்துள்ளார். ஆனாலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடியுள்ளனர். 
    மேலும், கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai