Enable Javscript for better performance
புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஜூன் 7-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஜூன் 7-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்

    By DIN  |   Published on : 04th June 2018 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 4) கூடுகிறது. வருகிற 7-ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகு, ஆளுநர் தலைமையில் மாநில திட்டக் குழுக் கூட்டம் நடத்தி எவ்வளவு தொகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்படும்.
    அதன் பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதல்  பெற்று புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
    முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தால் மார்ச் மாதமே தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக இடைக்கால நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
    அந்த வகையில், இந்த ஆண்டும் முதல்வர் நாராயணசாமி கடந்த மார்ச் 26-ஆம் தேதி 4 மாத செலவினங்களுக்காக ரூ.2,468 கோடிக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
    அதையடுத்து, கடந்த ஏப்.27-ஆம் தேதி ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மாநில திட்டக் குழு கூட்டப்பட்டு ரூ.7,530 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக  சட்டப்
    பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூன் 4) கூட்டப்படுகிறது.
    மார்ச் 26-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு ஆளுநர் உரையாற்றினார். ஆனால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறாமலேயே நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தால் அவசர, அவசரமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அன்றைய தினமே முடிக்கப்பட்டது.
    இதனால், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்க  உள்ளது. இது செவ்வாய்க்கிழமையும் நடைபெறும். புதன்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது. மீண்டும் வியாழக்கிழமை பேரவைக் கூட்டம் கூடியதும் முதல்வர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
    திங்கள்கிழமை கூட்டத்தொடரில், இலவச அரிசி முறையாக வழங்கப்படாதது, மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை ரூ.1.37 லட்சமாக உயர்த்தியது, சென்டாக் நிதியை இதுவரை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
    அதுபோல, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பாஜக நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக்குள் நுழைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். புதுவை அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றிவரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, தற்போது நியாய விலைக் கடை ஊழியர்கள் 15 மாத நிலுவை ஊதியம் கோரி, இலவச அரிசியை வழங்க மறுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    இதனால், பேரவை கூட்டத்தொடரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கூட்டங்கள் நடத்துவதற்கு கிழக்குப் பிரிவு காவல் துறை தடை விதித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai