Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: கர்நாடக எம்எல்ஏ கருத்துக்கு அமைச்சர் விளக்கமளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: கர்நாடக எம்எல்ஏ கருத்துக்கு அமைச்சர் விளக்கமளிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 05th June 2018 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னை தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.எல்.ஏ. -வுமான டி.கே. சிவகுமாரின் கருத்து குறித்து, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
    திருநள்ளாறு கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ டி.கே. சிவகுமார், செய்தியாளார்களிடம் பேசும்போது, காவிரி பிரச்னை குறித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்திடமும், மத்திய அரசிடமும் முறையிடப்படும் என தெரிவித்திருந்தார். அப்போது, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    புதுச்சேரி, தமிழகம் ஆகியவை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக அரசிதழில் அறிக்கை வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரச்னையை நீட்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது, பல்வேறு தரப்பினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இதுகுறித்து, புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் எம். அருள்
    முருகன் திங்கள்கிழமை காரைக்காலில் கூறியது: கர்நாடக எம்எல்ஏ டி.கே. சிவகுமாரின் கருத்து கண்டிக்கத்தக்கது. இது, காவிரிப் பிரச்னையில் ஒரு தீர்வு ஏற்பட்ட பின்னர், மீண்டும் காலதாமதப்படுத்துவதற்கான முயற்சி.
    திருநள்ளாறுக்கு வந்த அவருடன் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் இணக்கமாகப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய காவிரி நீரை திறந்து விடுவதற்கான கோரிக்கையை முன் வைத்திருக்க வேண்டும். ஆனால், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணனை அருகில் வைத்துக் கொண்டே, மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். இதற்கு புதுச்சேரி அமைச்சர் எவ்வித ஆட்சேபணையோ, கருத்தோ தெரிவிக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    இதுதொடர்பாக அமைச்சர், உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இத்தகைய நிலைப்பாடு குறித்து முதல்வர் நாராயணசாமியும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தனது கட்சியின் வளர்ச்சி பற்றி மட்டுமே கவலைப்படுகிறதே தவிர விவசாயிகள், மக்களைப் பற்றிய அக்கறை இல்லை என்பதை இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் புரிந்து கொள்ள 
    முடிகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai