Enable Javscript for better performance
புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு

    By DIN  |   Published on : 05th June 2018 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவர்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் மறுத்துவிட்டார். இதனால், கடந்த பேரவைக் கூட்டத் தொடரிலும்
    அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பேரவைத் தலைவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டட மேல்முறையீடு மனு விசாரணையில் இருந்து வருகிறது. இதையடுத்து, நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த கூட்டத்தொடரிலும் அனுமதி வழங்கப்படவில்லை.
    பேரவைக்குள் வழக்கம்போல பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோரின் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி வந்த போது அவரது காரை அனுமதிக்காததால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவரை காரில் செல்ல அனுமதி அளித்தனர்.
    பேரவை தொடங்கியவுடன் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இரங்கல் குறிப்பு வாசித்தார். முன்னாள் எம்எல்ஏ ஜி.பெரியநாயகம் சாமி, முன்னாள் எம்.பி. வி.பி. முனுசாமி ஆகியோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    அதைத் தொடர்ந்து பேரவை முன்பு வைக்கப்பட்ட சபைக் குறிப்புகளை முதல்வர் நாராயணசாமி படிக்கத் தொடங்கினார்.
    அப்போது அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எழுந்து, ஆட்சி அமைத்து 24 மாதங்களாகியும் 6 முறைதான் நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட ஓய்வூதியம் தரப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.
    முத்தியால்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை 300 பவுன் நகைகள் திருடு போயுள்ளது. ஏடிஎம் மோசடி தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிப் பேசினார்.
    ஆனால், முதல்வர் ஏடுகளை வாசித்துக்கொண்டே இருந்தார்.
    இதையடுத்து, அரசுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இருக்கை நோக்கி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். இதையடுத்து, சபைக் காவலர்கள் அவர்களை தடுத்தனர்.
    அப்போது அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
    அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி எழுந்து, சட்டப்பேரவையை ஏன் பூட்டி வைத்துள்ளீர்கள். மக்களுக்குத்தான் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பேரவைக்கும் பாதுகாப்பு இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.
    அப்போது, சபைக் குறிப்புகளை வாசிப்பதை நிறுத்திய முதல்வர், பேரவைக்கு பாதுகாப்பு உள்ளது. பேரவையை மூடி வைக்கவில்லை. ஐந்து நிமிடம் பேசிவிட்டுப் போக சட்டப்பேரவை இல்லை. எதிர்க்கட்சியினர் தங்களது வேலையை செய்யவில்லை. மக்கள் பிரச்னையை இங்கு பேசுங்கள் என்றார்.
    இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, ஏன் மற்றவர்கள் மீது பழி போடுகிறீர்கள். எந்தத் திட்டத்தையும் 2 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு புதுவையில் கெட்டுள்ளது. சென்டாக் நிதி தரவில்லை. மாணவர்களுக்கு, விவசாயிகளுக்கு சொன்னதை செய்தீர்களா என்றார். இதையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
    அப்போது, அரசைக் கண்டித்து ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர், வெளிநடப்பு செய்வது எதிர்க்கட்சி பணி அல்ல என்றார்.
    இதற்கிடையே, வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சிறிது நேரத்தில் மீண்டும் அவைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர். ஆனால், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடைசி வரை யாரும் வரவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai