"கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும்'
By புதுச்சேரி, | Published on : 06th June 2018 09:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இந்த ஆண்டிலாவது இயக்க வேண்டும் என்று திமுக குழுத் தலைவர் இரா.சிவா வலியுறுத்தினார்.
புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது: அதிகாரிகள் ஆளுநரின் பேச்சைக் கேட்டு இரட்டை ஆட்சி நடத்தி, திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஏஎஃப்டி பஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன் கொடுக்கவில்லை. விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் அதற்குரிய பணம் தரவில்லை. ஆளுநருக்கு தெரிந்து தான் உள்ளாட்சித் துறை வரியையும், வாடகையையும் உயர்த்தியுள்ளதா? 30 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட புதை சாக்கடை இணைப்புக்கு தற்போது வரி வசூலிக்கப்படுகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்த பின்னர் மூடும் நிலையை அரசு எடுத்துள்ளது.
ரூ.15 கோடி இருந்தால் இந்த ஆலையை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டே அரைவைப் பணியை தொடங்க வேண்டும்.
குடிசை மாற்று வாரியத்தில் நிதி இருந்தாலும் வாரிய தலைவர் பதவிக்கு செல்ல எம்.எல்.ஏ.க்கள் தயங்குகின்றனர்.
வாரம்தோறும் கள ஆய்வு செய்யும் ஆளுநர், குடிசை மாற்று வாரியம், ஏஎஃப்டி பஞ்சாலை, பாப்ஸ்கோ, பாசிக் போன்றவைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏனாமில் மட்டும் பொதுமக்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை, புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார் சிவா எம்.எல்.ஏ.