Enable Javscript for better performance
புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு: நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற தில்லி செல்கிறார் முதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு: நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெற தில்லி செல்கிறார் முதல்வர்

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நிதிநிலை அறிக்கைக்கு முழு அனுமதி பெறுவதற்காக புதுதில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை (ஜூன் 6) சந்தித்துப் பேசுகிறார்.
     புதுவை சட்டப்பேரவையில் அ.தி.மு.க. குழுத் தலைவர் ஆ.அன்பழகன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக எழுப்பிய கேள்விகளால் தொடர் விவாதம் நடைபெற்றது.
     அதன் விவரம்:
     அன்பழகன்: நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளதா? இல்லையா? எப்போது நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கலாகும்?
     முதல்வர்: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நடப்பதை பேரவையில் கூறக் கூடாது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய தேதி முடிவு செய்ய முடியாத சூழல் உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே மத்திய நிதி அமைச்சகமானது புதுவையின் நிதி ஆதாரத்தைப் பற்றி விளக்கம் கேட்டு, அதற்கு அளித்த பதிலையும் ஏற்றுக் கொண்டது.
     இந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளுநர் தலைமையிலான மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி நிதிநிலை அறிக்கை கோப்பு தயாரிக்கப்பட்டது.
     இந்தக் கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை ஒப்புதல் தந்து நிதித் துறைக்கு அனுப்பியது.
     மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ்கோயல் கோப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார்.
     மீண்டும் உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு வந்தது. சாதாரணமாக நிதித் துறையிடம் இருந்து கோப்பு வந்தவுடன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தந்துவிடும். ஆனால், கோப்பு தொடர்பாக மேலும் ஒரு விளக்கத்தை திங்கள்கிழமை கேட்டனர்.
     அதாவது, மத்திய அரசிடம் பல்வேறு துறைகளுக்காக ரூ.389 கோடி மானியம் கேட்டிருந்தோம். எப்போதும் மத்திய அரசிடம் பொதுவாகத்தான் மானியம் கேட்கப்படும். அதுபோலத்தான் இந்த ஆண்டும் கேட்டோம். ஆனால், மருத்துவத் துறை, கல்வித் துறை, சுற்றுச்சூழல் துறை, சுற்றுலாத் துறை என தனித் தனியாக துறைகளிடம் அனுமதி பெற்றுவிட்டீர்களா? என விளக்கம் கேட்டுள்ளனர்.
     இதுதொடர்பான கடிதம் திங்கள்கிழமைதான் வந்தது. அதற்கும் பதில் தயார் செய்து செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளோம். எனவே, ஓரிரு நாளில் முடிவு தெரியும் என்றார் முதல்வர்.
     அன்பழகன்: திட்டக் குழுக் கூட்ட முடிவு குறித்த அறிக்கை ஆளுநர் மாளிகையில்தான் இருந்தது. 17 நாள்கள் கழித்துத்தான் இழுத்தடித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் என ஏன் அறிவித்திருந்தீர்கள்?
     முதல்வர்: மத்திய நிதித் துறையைத் தொடர்பு கொண்டு செவ்வாய்க்கிழமை பேசினேன். பொதுவாக, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் கோப்புக்கு 15 நாள்களுக்குள் ஒப்புதல் கிடைத்துவிடும்.
     என்.ஆர்.காங். ஜெயபால்: நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி வராமல் பேரவையை நடத்துவதில் பயனில்லை.
     சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி: தில்லியில் உள்ள துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கித் தரக் கூறுங்கள்.
     பொதுப் பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம்: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம்தான் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
     அன்பழகன்: மக்களும், வியாபாரிகளும் நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். மத்திய அரசு திட்டமிட்டு பழிவாங்க நினைத்து, புதுவை மாநிலத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.
     எம்.எல்.ஏ.க்கள் அவமதிக்கப்பட்டதற்கு தலைமைச் செயலர், நிதிச் செயலர் ஆகியோர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெறாமல் இழுத்தடிப்பது புதுவை சட்டப் பேரவை வரலாற்றில் இதுவே முதல் முறை.
     பேரவைத் தலைவர்: இது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் என எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை.
     திமுக எம்.எல்.ஏ. சிவா: தற்போது மட்டுமல்ல, ரங்கசாமி முதல்வராக இருந்தபோதும் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாததற்கு அதிகாரிகள்தான் காரணம். திட்டமிட்டு சட்டப்பேரவையை அதிகாரிகள் முடக்குகின்றனர்.
     முதல்வர்: புதன்கிழமை நானே தில்லி சென்று மத்திய் உள்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்திப் பேசுவேன்.
     யார் உரிமையில் குறுக்கிட்டாலும் ஓர் அங்குலம்கூட விட்டுத் தரமாட்டோம். எம்எல்ஏ, பேரவை உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றார்.
     இறுதியாக பேரவைத் தலைவர் பொறுப்பை வகித்த பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai