Enable Javscript for better performance
மாட்டுவண்டியில் மணல் அள்ளிச் செல்வோரை கைது செய்கின்றனர்: பேரவையில் உறுப்பினர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

  

  மாட்டுவண்டியில் மணல் அள்ளிச் செல்வோரை கைது செய்கின்றனர்: பேரவையில் உறுப்பினர்கள் புகார்

  By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாட்டுவண்டியில் மணல் அள்ளிச் செல்வோரை போலீஸார் கைது செய்கின்றனர் என்று பேரவையில் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
   இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்:
   சிவா எம்.எல்.ஏ.: மணல் வண்டியை எதன் அடிப்படையில் பிடிக்கிறார்கள். புதுச்சேரியில் எங்கு மணல் இருக்கிறது. மணல் எங்கு திருடப்படுகிறதோ அங்கு தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மணல் வண்டிகளை பிடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
   வேளாண் அமைச்சர் இரா.கமலக்கண்ணன்: இது மாநிலத்தின் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. மாநிலத்தில் எங்கும் மணல் இல்லை. தமிழக முதல்வருடன், புதுவை முதல்வரும், பொதுப்பணித் துறை அமைச்சரும் பேச முயற்சி செய்தனர். ஆனால் நேரம் ஒதுக்கவில்லை. மணலை ஒட்டுமொத்தமாக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டு தடுப்பது, மாநில வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.
   அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன்: மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, தமிழக முதல்வரை சந்திக்க ஏன் மறுக்கிறார். தமிழக முதல்வரை சந்திக்க, புதுச்சேரி முதல்வர் தான் கடிதம் தர வேண்டும்.
   முதல்வர் நாராயணசாமி: நான் கடிதம் கொடுத்தும் தமிழகத்தில் நேரம் ஒதுக்கித் தரவில்லை.
   சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி: இப்போதாவது சந்திக்க நேரம் வாங்கித் தாருங்கள்.
   அன்பழகன்: புதுவை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு தடுப்பது அவசியம். மணல் கொள்ளையில் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். மணல் ஏலம் விடும் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
   காரைக்கால் வடக்கு எம்.எல்.ஏ. அசனா (அ.தி.மு.க.): காரைக்காலில் பிடிக்கப்படும் மணல் வண்டிகள் 20 நாள்களாக காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
   அமைச்சர் கமலக்கண்ணன்: மாநில நிர்வாகி (ஆளுநர்) மாநில வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளார். வளர்ச்சியை தடுப்பதிலேயே குறியாக உள்ளார். வறட்சி காலங்களில் கட்டுமானப் பணிகளில் தான் வேலை கிடைக்கும்.
   ஜெயபால் (என்.ஆர்.காங்கிரஸ்) : வேலையில்லாமல் கட்டுமானத் தொழிலாளர்கள் எப்படி சாப்பிடுவார்கள். இதற்கு முதல்வர் பதில் கூறவேண்டும்.
   அரசுக் கொறடா அனந்தராமன்: உச்ச நீதிமன்றம் மணல் எடுக்கத் தடை விதித்தததால் புதுச்சேரியில் மணல் தட்டுப்பாடு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக உள்ளது. மணல் குவாரி நடத்தும் இடத்தில் பிடிக்காமல், தேங்காய்த்திட்டில் பிடிக்கின்றனர். அதிகமாக அபராதமும் விதிக்கின்றனர்.
   ஜெயபால்: எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் ஆளுங்கட்சியே குறை கூறுவது விந்தையாக உள்ளது.
   அன்பழகன்: என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் வாரியத் தலைவர் நியமித்து ஆற்று மணல் முழுவதையும் எடுத்துவிட்டனர்.
   (இதற்கு என்.ஆர்.காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது).
   அமைச்சர் நமச்சிவாயம்: எங்களைக் குறை கூறும்போது இனிக்கிறது. உங்களைச் சொன்னால் எரிச்சலா?
   வையாபுரி மணிகண்டன் (அதிமுக): தமிழகத்தில் இருந்து வரும் மணல் முறைப்படி அனுமதி பெற்று வருகிறதா? தவறுகளை தட்டிக் கேட்கக் கூடாது என்பது வருத்தமாக உள்ளது.
   அன்பழகன்: தமிழகத்தில் தயார் செய்யப்பட்ட மது புதுச்சேரிக்கு எடுத்து வரப்பட்டால் அனுமதிப்பீர்களா?
   அமைச்சர் நமச்சிவாயம்: தவறான கருத்து. தப்பு எங்கு நடக்கிறதோ அங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
   டிபிஆர் செல்வம் (என்.ஆர்.காங்.): மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். முதல்வரும், வருவாய்த்துறை அமைச்சரும் பேசினால் 10 நிமிடத்தில் இதற்கு முடிவு கிடைத்துவிடும்.
   எம்.என்.ஆர்.பாலன் (காங்கிரஸ்): நிஜமா நடப்பது என்ன? தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு மணல் வருவதில்லை. கடத்தப்படுகிறது. தமிழகம் தருவதில்லை. பூமிக்கு கீழ் துளை போட்டு மணல் எடுக்கும்போது உயிர் இழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. மணல் இறக்குமதி கொள்கையை கொண்டுவர வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும்.
   அமைச்சர் கமலக்கண்ணன்: தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது பிற மாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்ல சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது புதுவை திமுகவினர் தமிழக துணை முதல்வராக இருந்த ஸ்டாலினிடம் பேசினர். அவரும் புதுவைக்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளம், ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவு மணல் கடத்தப்படுவதை தடுக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றார்.
   புதுவைக்கு வரும் மணலை அப்போது தமிழகத்தில் யாரும் தடுக்கவில்லை. இதனால் புதுச்சேரிக்கு மணலும் தடையின்றி கிடைத்தது.
   பாஸ்கர் (அ.தி.மு.க.): புதுவை முதல்வர் கடிதம் தந்தால் நாங்கள் அழைத்துச் சென்று தமிழக முதல்வரை சந்தித்து அனுமதி வாங்கித் தருகிறோம். எனது தொகுதியில் மணல் தட்டுப்பாட்டால் மேம்பாலப் பணியும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியும் நின்றுள்ளது என்றார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai