Enable Javscript for better performance
மாநில அந்தஸ்து கேட்டபோது தடுத்தது யார்? காங்கிரஸ்-என்.ஆர்.காங். வாக்குவாதம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அந்தஸ்து கேட்டபோது தடுத்தது யார்? காங்கிரஸ்-என்.ஆர்.காங். வாக்குவாதம்

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டபோது அதை தடுத்தது யார் என்ற கேள்வியை எழுப்பி காங்கிரஸ்-என்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் புதுவை பேரவையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
     புதுவை சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் என்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் என்எஸ்ஜெ ஜெயபால் பேசத் தொடங்கினார்.
     அவர் பேசும்போது, கோடை காலத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. புதுவை மாநிலத்தில் துணை மின்நிலையம் அமைக்க லாஸ்பேட்டையில திட்டம் உள்ளது. இதில் அமைந்தால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராகும்.
     தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால், இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
     நிதிச்சுமை என்ஆர். காங்கிரஸ் ஆட்சியால் எற்பட்டது என குற்றம் சுமத்தப்படுகிறது. இப்படி குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டாம். நிதியை பெருக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும் என்றார்.
     அப்போது குறுக்கிட்டு அனந்தராமன் பேசுகையில், கடந்த கால தவறான கொள்கை முடிவினால் ஒவ்வொரு நிறுவனத்திலும் தேவைக்கு அதிகமான ஆள்களை வைத்து நிதிச்சுமையை ஏற்படுத்தினர்.
     நிதிப் பற்றாக்குறை சூழல் புதுவையில் உள்ளது. அரசு ஊழியர்கள் மக்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையில் புதுவை அரசு 10 ஆண்டுகளாக தவிக்கிறது.
     தனிக்கணக்கு தொடங்கப்பட்ட பிறகுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
     அப்போது குறுக்கிட்ட உறுப்பினர் ஜெயபால், இதற்குத் தான் தனி மாநில அந்தஸ்தை எங்கள் முதல்வர் என்.ரங்கசாமி கேட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது இருக்கும் நீங்கள் எல்லோரும் சிறப்பு மாநில அந்தஸ்தை கேட்டீர்கள் என்றார்.
     இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, தனி மாநில அந்தஸ்து கொண்ட பிகார் மாநில முதல்வர் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதேபோல, ஆந்திர முதல்வரும் சிறப்பு மாநில அந்தஸ்தை கேட்டுள்ளார். இதனைக் கருத்தில் வைத்துக் கொண்டு உறுப்பினர்கள் பேச வேண்டும் என்றார்.
     அதையடுத்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மாநில அந்தஸ்தை விட சிறப்பு மாநில அந்தஸ்தில் தான் லாபம் அதிகம். தனிக்
     கணக்கு தொடங்கியதால் தான் இந்த விளைவு ஏற்பட்டது என்றார்.
     இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜெயபால், முதல்வர் மட்டுமே இதை முடிவெடுக்க முடியுமா நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதால் தானே தனி மாநில கணக்கு அப்போது உருவானது என்றார்.
     அதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எப்போதும் அமைச்சர்களை
     கேட்டு முடிவெடுத்ததில்லை என்றார்.
     அப்போது குறுக்கிட்ட அன்பழகன், அப்போது முதல்வராக இருந்தது யார். அப்போது காங்கிரஸ் ஆட்சிதான் நடந்துக்கொண்டிருந்தது. புதுவை மாநிலத்துக்கு வரலாற்று தவறு செய்தது காங்கிரஸ் அரசுதான் என்றார்.
     இதற்குப் பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், ஒரு தனி நபரின் தவறான கொள்கை முடிவு தவறான எண்ணம் தான் இப்படி ஆனது என்றார்.
     அப்போது ஆவேசமடைந்த ஜெயபால், எங்களுக்கு எதிரிகள் கிடையாது. துரோகிகளால் தான் நாங்கள் வீழ்ந்தோம் என்றார்.
     இதையடுத்து, பேசிய அமைச்சர் நமச்சிவாயம், என்ஆர் காங்கிரஸில் இருந்தவர்கள் அனைவரும் துரோகிகளா? எனக் கேள்வியை எழுப்பினர்.
     அப்போது குறுக்கிட்ட முதல்வர், புதுவை முழுவதும் பணப் பரிவத்தனையை பொருத்தவரை எண்ம மயமாக (டிஜிட்டல் மயம்) இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எனக்கு கடிதம் எழுதினார்.
     ஆனால், நான் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பதில் அனுப்பினேன். இந்த முதுகெலும்பு உங்களுக்கு இல்லை. இதனால் தான் தனிக் கணக்கை ஏற்றுக் கொண்டீர்கள் என்றார்.
     இத்துடன் விவாதம் முடிந்தது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai