மின் விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி, அரசு வேலை: முதல்வர்
By புதுச்சேரி, | Published on : 06th June 2018 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் மின்விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா பேசும்போது, நெல்லித்தோப்பு தொகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மின்பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.
பணியின்போது இறந்தால் காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு காப்பீட்டுத் திட்டம் மின்துறையில் இல்லை. இதனால் பணியின்போது இறக்கும் ஊழியர்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைப்பதில்லை. எனவே, காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறக்கும்போது ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. எனவே, உடனடியாக மின்துறை ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்படும். தற்போது இறந்தவருக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்றார்.
இதையடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் தரப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
இறந்த மின் ஊழியர் காளிதாஸின் மனைவி 2 மாதங்களுக்கு முன்பு தான் புற்றுநோயால் உயிரிழந்தார்.
இதனால் தற்போது குழந்தைகள் அனாதையாகியுள்ளனர். தகுதியான நபருக்கு வேலைவாய்ப்பு தர உறுதி அளிக்கிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கும்போது, பணி செய்து கொண்டிருக்கும்போது இறப்பவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வரும் இசைவு தெரிவித்தார்.