Enable Javscript for better performance
வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதிக்கு அனுமதி: புதுவை அரசிதழில் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதிக்கு அனுமதி: புதுவை அரசிதழில் வெளியீடு

    By  புதுச்சேரி,  |   Published on : 06th June 2018 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narayanasamy1

    வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதிக்கான சட்டத் திருத்தம் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
     புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
     கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். புதுவையில் நிலவும் மணல் பிரச்னை, விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அவரிடம் பேசினேன். அவரும் உதவுவதாக உறுதியளித்தார். அவர் உறுதி அளித்த ஆவணமும் உள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினேன்.
     இதுகுறித்து விவாதிக்க பொதுப் பணித் துறை, வேளாண் துறை அமைச்சர்களை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரக் கோரினோம். தமிழக முதல்வர் வேலைப்பளுவால் நேரம் ஒதுக்கித் தரவில்லை.
     கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை மூலம் உத்தரவு போடும் வழக்கம் புதுவையில் தற்போது வந்துவிட்டது. அதிகாரிகளுக்கு கட்செவி அஞ்சலை பார்த்தவுடன் ஆட்டம் வந்துவிடுகிறது. புகார் வந்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்து மாநில நிர்வாகி (ஆளுநர்) உத்தரவிட வேண்டும். அது புரியாமல் ஆளுநர் சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறார். தனது உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிக்கு நெருக்குதல் கொடுக்கிறார்.
     இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் கூறினால் அவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.
     கட்செவி அஞ்சல் மூலம் தவறான தகவலை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் ஆளுநருக்கு அனுப்புகின்றனர். அவரும் அதை வைத்துக் கொண்டு உத்தரவு போடுகிறார். நேரம் வரும்போது அந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை வெளியிடுவேன்.
     லாரியில் வரும் மணலை தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி புதுவை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். புதுவைக்கு மணல் தேவை உள்ளது. அமைச்சரவையில் வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு விதிமுறை வகுத்து, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. அதை அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளோம். புதுவை அரசுக்கு உரிய உரிமக் கட்டணத்தை செலுத்தி விட்டு யார் வேண்டுமானாலும் மணல் இறக்குமதி செய்யலாம். காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் இறக்குமதி செய்ய அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
     யாராக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. மற்றவர் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. சிலர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து உண்மை தெரியாமல் உத்தரவு போட்டுவிட்டு பின்னால் வருந்துகின்றனர்.
     கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை போன்றவை மூலம் வரும் உத்தரவுகளை பொருள்படுத்தாமல் அதிகாரிகள் விதிமுறைக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai