Enable Javscript for better performance
ஏ.டி.எம். பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பேரவையை முற்றுகையிட முயன்ற இடதுசாரி கட்சியினர் 137- Dinamani

சுடச்சுட

    

    ஏ.டி.எம். பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பேரவையை முற்றுகையிட முயன்ற இடதுசாரி கட்சியினர் 137 பேர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏ.டி.எம். பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற இடதுசாரிக் கட்சியினர் 137 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     புதுச்சேரியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பலரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போனது. பணத்தை இழந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், போலி ஏ.டி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
     இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், முக்கிய எதிரியான சந்துருஜி இதுவரை கைது செய்யப்படவில்லை.
     இந்த நிலையில், ஏ.டி.எம். பண மோசடியில் ஈடுபட்ட முக்கிய எதிரியான சந்துருஜியை கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியும், கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரு வீதி அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து அவர்கள் முக்கிய சாலை வழியாக பேரணியாகச் சென்று புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர்.
     நேரு வீதி அருகே இருந்து பேரணியாக சட்டப்பேரவை முற்றுகையிட வந்த அவர்களை ஜென்மராக்கினி ஆலயம் அருகே தடுப்புக் கட்டைகளை அமைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்பாட்டக்காரர்கள் தடுப்புக் கட்டைகள் மீது ஏறி பேரவையை நோக்கிச் செல்ல முயன்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 137 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சுமார் ரூ. 400 கோடிக்கும் மேல் கொள்ளையடித்துள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கும்பலை பாரபட்சமின்றி, உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
     போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமை வகித்தார். அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், ஏஐடியூசி மாநிலத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம், உறுப்பினர்கள் சுப்பையா, சரளா, பலராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் கலியவரதன், பிரபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai