Enable Javscript for better performance
நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில் பேரவையைக் கூட்டியது தவறு: முன்னாள் எம்.- Dinamani

சுடச்சுட

    

    நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில் பேரவையைக் கூட்டியது தவறு: முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில், புதுவை சட்டப்பேரவையைக் கூட்டியது தவறு என்று புதுவை மாநில அதிமுக இணை செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
     இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்பதற்காக சட்டப்பேரவையை இரு நாள்கள் மட்டுமே நடத்திவிட்டு, காலவரையின்றி ஒத்திவைத்தது துரதிஷ்டவசமானது. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும், பேரவையின் மாண்பையும், புதுவை மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்தச் செயலை வன்மையாகக் கணடிக்க வேண்டும்.
     இந்த அசாதாரண நிலைக்கு மத்திய அரசு காரணமாக இருந்தாலும், மாநில அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுதான் முக்கிய காரணமாகும். ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கையை ஆண்டின் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கும் போதுதான் 12 மாதங்களிலும் சமமாக சீராக செலவு செய்ய முடியும்.
     மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்காதது புதுவை அரசின் முதல் தவறு. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நடந்த திட்டக் குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பாதது 2-ஆவது தவறு. இறுதி செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை ஓர் உயரதிகாரி தில்லிக்கு கொண்டு சென்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முழுமையாக விளக்கி ஒப்படைத்திருக்க வேண்டும்.
     புதுவை மாநில அதிகாரியே தில்லியில் தங்கியிருந்து கோப்புகளின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாதது மூன்றாவது தவறு. புதுவை அரசு அனுப்பிய நிதிநிலை அறிக்கையில் குறைபாடுகள் இருந்தது நான்காவது தவறு. மத்திய அரசின் உத்தரவு இல்லாமலேயே மத்திய அரசின் உதவியாக ரூ. 360 கோடி இருக்கும் என்று புதுவை அரசு தானாகவே எப்படி குறிப்பிட முடியும்?
     இதற்கு புதுவை அரசு சரியான விளக்கம் தராததால், மத்திய அரசு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தரவில்லை. நிதிநிலை அறிக்கையைக் காலத்தோடு தயாரித்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாதது மாநில அரசின் திறமையின்மையைத்தான் காட்டுகிறது. மத்திய அரசின் ஒப்புதல் வராத நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்டியிருக்கக் கூடாது.
     தானாக சட்டப்பேரவையைக் கூட்டிய முதல்வர், பேரவையைக் காலவரையின்றி ஒத்திவைத்ததற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தற்போது, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற தில்லி செல்வதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து அங்கு சென்றுள்ளார்.
     கடந்த மாதத்தில் பலமுறை முதல்வர் தில்லிக்கு சென்றிருக்கிறார். அப்போதே தில்லியில் ஓரிரு நாள்கள் தங்கியிருந்து நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் ஒப்புதல் பெற்றிருக்கலாம்.
     மத்தியில் அமைச்சராகவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்திலும் பணியாற்றிய முதல்வருக்கு இது தெரியாத விஷயமல்ல. அவரது ஆட்சிக் காலத்தில் புதுவை பேரவைக்கும், புதுவை மக்களுக்கும் இந்த அவமரியாதை நடந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயம் எனக் கூறியுள்ளார் ராமதாஸ்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai