Enable Javscript for better performance
விபத்தில் பெண் காவலர் இறந்த சம்பவம்: நாடக சபா உரிமையாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் பெண் காவலர் இறந்த சம்பவம்: நாடக சபா உரிமையாளர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 08th June 2018 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் பெண் காவலர் இறந்த சம்பவம் தொடர்பாக நாடக சபா உரிமையாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகள் பூங்குழலி (23). இவர், ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். ஜூன் 3-ஆம் தேதி காலை தனது மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்துக்கு புறப்பட்டு வந்தார். வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பூங்குழலி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் பூங்குழலி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பத்துக்கணணு - கூடப்பாக்கம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
     விபத்து நிகழ்ந்த போது, அந்த வழியாக டெம்போ வாகனம் ஒன்று சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாடக சபா உரிமையாளர் நாராயணசாமி என்பவரது வாகனம் என்பது தெரிய வந்தது.
     இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி இரவு கூடப்பாக்கம் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் இரவு நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலை நாடகக் குழுவினர் டெம்போ வாகனத்தில் சொந்த ஊருக்குப் புறப்பட்டு, பிள்ளையார்குப்பம் அருகே சென்ற போது, எதிரே வந்த பெண் காவலர் பூங்குழலி மீது டெம்போ மோதியது தெரிய வந்தது.
     இதையடுத்து, நாராயணசாமியை வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai