Enable Javscript for better performance
அனுமதியின்றி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விநியோகம்: ஆழ்துளை கிணற்றுக்கு "சீல்'- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விநியோகம்: ஆழ்துளை கிணற்றுக்கு "சீல்'

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலம், காட்டுக்குப்பம் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் விற்பனை செய்த பகுதியில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் ஆய்வுக்குப் பின்னர், விதிகளை மீறி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
     புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பலர் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை எடுத்து வருகின்றனர். இவர்களில் சிலர் வெளி மாநிலம், புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீரை அனுமதியின்றி விற்பனை செய்து வருகின்றனர்.
     அந்த வகையில், காட்டுக்குப்பம் வாய்க்கால் ஓடைப் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் நாள்தோறும் 20 டேங்கர் லாரிகளில் 7 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துச் சென்று கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள், கன்னிக்கோயில் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
     இதுபற்றி அறிந்த புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணைய அதிகாரி பெத்தபெருமாள் அங்கு சென்று தண்ணீர் எடுப்பதை வியாழக்கிழமை மாலை தடுத்து நிறுத்தினார். மேலும், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். எனினும், அதன்பின்னரும் என்ஜின் மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுத்து விற்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
     இதுகுறித்து புகார் வந்ததை அடுத்து புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
     தடை செய்யப்பட்ட கடலோர மண்டலத்தில் அங்கீகாரமில்லாமலும், பதிவு செய்யப்படாமலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். இதையடுத்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றுக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர். மேலும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், விளக்கம் கேட்டு நில உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai