இளைஞர் காங்கிரஸுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: முதல்வர் தொடக்கி வைத்தார்
By புதுச்சேரி, | Published on : 09th June 2018 08:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவை பிரதேச இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
உறுப்பினர் சேர்க்கையைத் தொடக்கி வைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் இளைஞர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்தனர்.
அதனால்தான் இளைஞர் காங்கிரஸில் இருந்த சிலர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மத்திய அமைச்சர்களாக வளர்ச்சி அடைந்தனர். சிலர் மாநிலக் கட்சித் தலைவர்களாகக்கூட ஆனார்கள்.
காங்கிரûஸ பொருத்தவரை கட்சிக்கு உழைப்பவர்களுக்கு பலன் நேரடியாகக் கிடைக்கும். ஆனால், ஒரு பலமும் இல்லாத பாஜகவினர் நமக்குச் சவால் விடுகின்றனர்.
நடந்து முடிந்த குஜராத், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெற்று, நமது கை ஓங்கியுள்ளது. அண்மையில் நடந்த இடைத் தேர்லில் கூட பாஜக படுதோல்வியை அடைந்துள்ளது.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்தால் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக உள்ளனர்.
பிரதமர் மோடியைப் பற்றி பொதுமக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டனர். அதனால்தான், மோடியின் செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது.
புதுவை அரசுக்கு மத்திய பாஜக அரசு எதிராக உள்ளது. மத்திய அரசின் பிரதிநிதியாக புதுவையில் உள்ள ஆளுநர் மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். கோப்புகளைத் திருப்பி அனுப்புகிறார். ஆனாலும், இந்த தடைகளைக் கடந்து மக்கள் நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக இளைஞர் காங்கிரஸார் கடுமையாக உழைக்க வேண்டும். தொகுதி வாரியாக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீனிவாஸ், புதுவை பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.