ஏ.டி.எம். பண மோசடியில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு: சிபிசிஐடி போலீஸார் தகவல்
By புதுச்சேரி | Published on : 09th June 2018 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்பிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரது வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் திருடு போனது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதல் கட்டமாக, புதுச்சேரியில் கணினி மையம் நடத்தி வந்த பாலாஜி, ஜெயச்சந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கடலூரைச் சேர்ந்த கமல், சென்னையைச் சேர்ந்த ஷ்யாம், புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர மையத்தில் தற்காலிக மருத்துவராகப் பணியாற்றி வந்த விவேக் ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய எதிரிகளான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சந்துருஜி, முதலியார்பேட்டையைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், முக்கிய எதிரிகளுக்கு ஸ்வைப்பிங் இயந்திரங்களைக் கொடுத்து உதவியதாக வியாபாரிகள் சிவக்குமார், கணேஷ், டேனியல் ஆகியோரை கடந்த வாரம் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யாவை வியாழக்கிழமை கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கடவுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பெல்ஜியம், அயர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. முக்கிய எதிரியான சந்துருஜி விரைவில் கைது செய்யப்படுவார் என்றார் அவர்.