Enable Javscript for better performance
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தால் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பு: திமு- Dinamani

சுடச்சுட

    

    நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தால் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பு: திமுக குற்றச்சாட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டப்பேரவைக்குள் வரத் தடை விதித்ததால், நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
     புதுச்சேரி தெற்கு மாநிலம், ஏம்பலம் தொகுதி திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஏம்பலம் திருவள்ளுவர் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நல உதவிகளை வழங்கிய சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:
     நாடு முழுவதும் காலூன்றிவிட்டதாக பாஜக கூறினாலும், தமிழகத்தில் ஒருபோதும் நுழைய முடியாது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் விதைத்த தமிழ் உணர்வு, இன உணர்வு தமிழர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது. திராவிட பாரம்பரியத்தில் திமுகவை தற்போது ஸ்டாலின் வழிநடத்துகிறார். எனவே, பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
     புதுவையில் தற்போது 8 ஆயிரம் ஊழியர்களுக்கு 8 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஊதியம் வழங்கமுடியாததற்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகமின்மையே காரணம்.
     கடும் நெருக்கடியான நிலையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு பொறுப்பு வகித்து வரும் நிலையில், மத்திய அரசு துணைநிலை ஆளுநர் மூலம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.
     இதன் உச்சகட்டமாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியாத நிலையை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி உள்ளது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதித்தால் மட்டுமே நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு நிர்பந்திக்கிறது.
     ஆனாலும், இந்த ஆட்சியில் புதுவை மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் திமுக ஆதரவு அளித்து வருகிறது. இருப்பினும் வரிகள் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குப்பைக்கு வரி என மக்கள் விரோத நடவடிக்கையை இந்த அரசு எடுத்து வருவதை ஏற்க முடியாது.
     ஜானகிராமன் தலைமையில் திமுக ஆட்சி நடந்தபோதுதான் மருத்துவக் கல்லுôரிகள், தொழிற்சாலைகள், எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எனவே, மக்கள் நலத் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த புதுவையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்றார் அவர்.
     கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன், மாநில திமுக இலக்கிய அணிச் செயலர் கவிதைப்பித்தன் ஆகியோர் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். மாநில திமுக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, தொகுதி திமுக செயலர் ரவிச்சந்திரன், தொகுதி துணைச் செயலர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai