Enable Javscript for better performance
பாலுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண் அமைச்சர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    பாலுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண் அமைச்சர் உறுதி

    By  புதுச்சேரி,  |   Published on : 09th June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலுக்கு நியாயமான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை வேளாண் அமைச்சர் இரா.கமலக்கண்ணன் உறுதியளித்தார்.
     புதுவை வேளாண் துறை சார்பில் புதுச்சேரி ஆரோ பண்ணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் மகளிர் மேம்பாடு, உணவுப் பாதுகாப்புக் குழு கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:
     வேளாண் துறையில் இயற்கை விவசாயம் செய்வதற்கு புதுவை அரசு ஊக்கமளித்து வருகிறது. மதிப்புக் கூட்டுவதன் மூலம் தென்னை விவசாயிகளுக்கான வருவாயை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.
     மேலும், வேளாண் இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள் தலைமையில் விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிப்பது, வேளாண் துறையின் பயன்களை விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
     ஆண்களுக்கு நிகராக வேளாண் நிர்வாகப் பொறுப்புகளில் பெண்களும் வர வேண்டும். அப்போதுதான் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாகவே, விவசாயத்தில் ஆர்முள்ள மகளிரை ஒன்றிணைத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     புதுவை மகளிர் நேரடியாக விவசாயம் செய்து, உற்பத்தியான பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருளாகச் சந்தைபடுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு ஊக்கப்படுத்தி ஆதரவு தரக்கூடிய நிலையில், முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
     மாடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளதாக பலர் தெரிவித்தனர். முத்ரா வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கும் திட்டத்துக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
     இந்தத் திட்டம் தொடர்பாக வங்கி அதிகாரிகளுடனான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 500 பேருக்கு ரூ. 50 ஆயிரம் எவ்வித நிபந்தனையுமின்றி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் உள்ளன. விண்ணப்பங்களை வாங்கி நிறைவு செய்து அளித்தால், பிணையின்றி கடன் பெற்று கறவை மாடு வாங்கி வளர்க்கலாம்.
     பாலுக்கு நியாயமான விலை கிடைக்கவும், விரைவாக தீவனம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
     மேலும், வேளாண்மை சம்பந்தமான எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதுகுறித்து விவசாயிகளுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் தகவல் அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமைச்சர் கமலக்கண்ணன்.
     முன்னதாக, வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி வரவேற்றார். வேளாண் துறைச் செயலர் அன்பரசு மகளிர் மேம்பாட்டுக்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
     இந்த நிகழ்ச்சியில், வேளாண் கூடுதல் இயக்குநர் முருகேசன், காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் வசந்தகுமார், வேளாண் துறை அதிகாரிகள், 63 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 175 பெண்கள் கலந்து கொண்டனர். வேளாண் கூடுதல் இயக்குநர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai