Enable Javscript for better performance
அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் ஜூன் 12-இல் இறுதி செய்யப்படும்: முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் ஜூன் 12-இல் இறுதி செய்யப்படும்: முதல்வர்

    By DIN  |   Published on : 10th June 2018 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களின் மொத்த எண்ணிக்கை ஜூன் 12-ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுவை மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்விக் கட்டணம், அரசு ஒதுக்கீட்டு இடங்களை முடிவு செய்வது குறித்து சென்டாக் அமைப்பின் நிர்வாகிகள், கல்வி நிறுவன நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    நாட்டியேலே முதல் முறையாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் இணையதளம் மூலம் மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேர்க்கும் முறையைக் கொண்டு வந்தோம். அது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான இணையதள சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியானது. இந்த அதிக அளவில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால், இணையதளங்கள் அடிக்கடி முடங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இணையதளம் செயல்படும் திறனை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் 3 மடங்காக உயர்த்தவும் அறிவுறுத்தியுள்ளோம்.
    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு புதுச்சேரியில் இருந்து 753 பேர், பிற மாநிலங்களில் இருந்து 1,183 பேர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 3 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மூன்று தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 165 இடங்களைப் பெற்றோம். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே இருந்ததைவிட 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டு எண்ணிக்கையை உயர்த்தும்போது, இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
    நீதிபதி ஆதிநாதன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் இரண்டாவது கூட்டத்தில் கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அரசு இட ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம், பொது ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை முடிவு செய்ய வேண்டும். விரைவில் முடிவு செய்யும்படி கேட்டுள்ளோம்.
    ஜூன் 12-ஆம் தேதி மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளை மீண்டும் அழைத்துப் பேச உள்ளோம். அன்றைய தினம் அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை என்பது குறித்து முடிவு செய்யப்படும். தேவைப்பட்டால் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்படும். நீட் தேர்வில் புதுவை அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரத்தைச் சேகரித்து வருகின்றோம். தகவல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai