Enable Javscript for better performance
ஏ.டி.எம். பண மோசடி வழக்கு: தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு பரிசீலிக்கப்படும்: முதல்வர்- Dinamani

சுடச்சுட

  

  ஏ.டி.எம். பண மோசடி வழக்கு: தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு பரிசீலிக்கப்படும்: முதல்வர்

  By DIN  |   Published on : 10th June 2018 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் தேவை ஏற்பட்டால் மத்திய புலனாய்வு (சிபிஐ) விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
  இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
  நீட் தேர்வு முடிவு வந்த பின்னர், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் 2 மாணவிகள் மருத்துவ இடம் கிடைக்காது என்ற நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கண்டமங்கலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது மிகவும் வருந்ததக்கது.
  கடந்த ஆண்டு பெரம்பலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியது.
  தமிழகம் மட்டுமன்றி, ஹைதராபாத், தில்லி நகரங்களிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து வேண்டும். பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பின்னர் மீண்டும் நீட் தேர்வு என்பதை ஏற்க முடியாது. ஏற்கெனவே பாடத் திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி, அதற்கான மதிப்பெண்ணையும் பெற்றுள்ளவர்கள் ஏன் நீட் தேர்வை எதிர் கொள்ள வேண்டும்? நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று.
  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று புதுவை அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், அதற்கு மத்திய சுகாதாரத் துறை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீட் தேர்வு மரணத்தை கேலியாகப் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம், புதுவை மாணவர்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல் இதுபோல விமர்சனம் செய்திருப்பது வருத்தமளிக்கிறது.
  பாஜக ஆளும் மாநிலங்களல்லாத முதல்வர்களை ஒருங்கிணைத்து உச்ச நீதிமன்றத்தை அணுகி நீட் தேர்வை எதிர்த்து போராட இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதுவை அரசு அதற்கு முழு ஆதரவு தெரிவிக்கும். ஏனெனில், புதுவையில் சென்டாக் மூலம் பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றன. அப்போது, சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு எளிதாக இடம் கிடைத்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அதனால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகத் தயாராக உள்ளோம்.
  போலி ஏ.டி.எம். அட்டைகள் தயாரித்து அதன் மூலம் பண மோசடி செய்த வழக்கில், முக்கிய எதிரிகள் இருவரில் ஒருவரான சத்யாவை கைது செய்து ஆவணங்களையும், ஸ்வைப் இயந்திரங்கள், பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய எதிரி சந்துருஜி பல மாநிலங்களில் மாறி மாறி பதுங்கி வருவதை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். சந்துருஜி கைது செய்யப்பட்டால்தான் இந்த வழக்கில் யார் யாருக்குத் தொடர்புள்ளது என்பது குறித்த முழு விவரம் தெரிய வரும்.
  இந்த வழக்கில் சிஐடி, சைபர் க்ரைம், சிறப்பு அதிரடிப்படை ஆகிய மூன்று பிரிவு போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச கும்பலுக்குத் தொடர்பிருப்பது உறுதியாகும்பட்சத்தில், தேவை ஏற்பட்டால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai