Enable Javscript for better performance
புதுவை ஆளுநருக்கு திமுக பிறந்த நாள் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் 69-ஆவது பிறந்த நாளையொட்டி, திமுக சார்பில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
    இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. சனிக்கிழமை வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி:
    இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியாகத் தேர்வு பெற்ற தாங்கள் தங்களது பணிகாலத்தில் திறம்பட செயல்பட்டு இந்த நாட்டுக்கும், பெண் இனத்துக்கும் பெருமை சேர்த்தவர். அப்படிப்பட்ட திறமையான பெண்மணி ஒருவர் புதுவை துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற போது, மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
    புதுவை அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மக்கள் நல திட்டங்களையும் செய்வார் என்ற மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதற்குத் தகுந்தார்போல, தாங்களும் மாநிலத்தின் நிதிநிலையை ஆய்வு செய்தீர்கள். பின்னர், தூய்மையான புதுச்சேரி என்ற நோக்கில் குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டீர்கள்.
    ஆளுநர் மாளிகையைப் பொதுமக்கள் தங்களது குறைகளைக் கூறுவதற்காக திறந்துவிட்டீர்கள். வாரத்தின் இறுதி நாள்களில் நகர் வலம் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டீர்கள்.
    மத்திய அரசின் பிரதிநிதியான தங்களால் பல புதிய திட்டங்களும், அதிக நிதியும் வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால், தாங்கள் ஆளுநராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும், எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் இதுவரை நடக்கவில்லை. மத்திய அரசின் கொள்கைப் பரப்புச் செயலர் போல செயல்பட்டு வருவதும், புதுவையில் ஏற்கெனவே நடைபெற்று வந்த பல திட்டங்களுக்கு தாங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதும் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    எனினும், மத்திய அரசிடமிருந்து புதுவைக்குத் தேவையான கூடுதல் நிதியைப் பெற்று ஏற்கெனவே உள்ள திட்டங்களையும், தொலைநோக்கு பார்வையுடன் வளமான புதுவையை உருவாக்கும் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    புதுவை மாநில அரசியல் வரலாற்றில் திறம்படச் செயலாற்றி, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள முன்னாள் ஆளுநர்கள் சேத்திலால், பி.டி.குல்கர்னி, கே.ஆர்.மல்கானி ஆகியோர் பட்டியலில் தாங்களும் இடம்பெற வேண்டும். தாங்களுக்கு திமுக சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என அந்த வாழ்த்துச் செய்தியில்
    கூறியுள்ளார் சிவா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai