Enable Javscript for better performance
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் புதுவை முதல்வருடன் கருத்தொற்றுமை: ஆளுநர் கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் புதுவை முதல்வருடன் கருத்தொற்றுமை: ஆளுநர் கிரண் பேடி

    By  புதுச்சேரி,  |   Published on : 11th June 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முதல்வருடன் தனக்கு கருத்தொற்றுமை இருப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
     புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா காவல் துறை அலுவலகத்தில் "காவலர் சிங்கம்' என்ற சிலையுடன் கூடிய கணினி மூலம், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய சுற்றுலாத் தலங்கள் எந்தெந்த பகுதியில் உள்ளன, அந்த இடங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும், அதற்கான முழு விவரங்களை அறிய காவலர் வடிவிலான ரோபோ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
     இந்தச் சிலையை திறந்து வைத்து துணைநிலை ஆளுர் கிரண் பேடி பேசியதாவது:
     புதுவையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக வைத்திருப்பதில் எனக்கும், முதல்வருக்கும் நல்ல கருத்தொற்றுமை உள்ளது. போலீஸார் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஏடிஎம் பண மோசடி வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். இதுவரை அந்த வழக்கின் மீதான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எதிரிகள் அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் அவர்.
     முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
     ஆன்மிகச் சுற்றுலா, ஓய்வெடுக்க சுற்றுலா, பாரம்பரிய கலாசார சுற்றுலா என மூன்று வகையான சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதுகாப்பு இருந்தால்தால்தான் சுற்றுலாப் பயணிகள் வர முடியும். அதைக் கருத்தில் கொண்டுதான் ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை இயக்குநரை அழைத்து முனைந்து செயல்பட வேண்டும்.
     மக்களின் உடைமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தொழில்சாலைகள் நிம்மதியாக நடத்தப்பட வேண்டும், வியாபாரம் சிறப்பாக நடைபெற வேண்டும், சுற்றுலாப் பயணிகளை கனிவோடு விசாரித்து உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தியுள்ளேன்.
     காவல் துறையில் கடைநிலை ஊழியர் முதல் தலைமை அதிகாரி வரை சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் குற்றங்கள் குறைந்துள்ளன. கிடப்பில் கிடந்த வழக்குகளை வெளியில் எடுத்து தீர்வு கண்டுள்ளனர்.
     நெல்லித்தோப்பு சேட்டு கொலையில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலங்கள், வீடுகளை அபகரிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்.
     அப்பாவி மக்கள் வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தை விஞ்ஞான ரீதியில் திருடியுள்ளனர். இதில் இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டிய நிலை உள்ளது. வெளிமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
     புதுவை காவல் துறையில் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. இந்த வழக்கில் சில தகவல்களை குற்றவாளிகளிடம் பகிர்ந்து வருகின்றனர். புதுவையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில், ஆளுநரின் பங்கும் உள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெüதம், டிஐஜி சந்திரன், முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா உள்பட பலர் பங்கேற்றனர்.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai