Enable Javscript for better performance
ஏடிஎம் பண மோசடி வழக்கு: முக்கிய எதிரி முகநூலில் விடியோ பதிவை வெளியிட்டதால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

  

  ஏடிஎம் பண மோசடி வழக்கு: முக்கிய எதிரி முகநூலில் விடியோ பதிவை வெளியிட்டதால் பரபரப்பு

  By  புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chandruji

  ஏடிஎம் பண மோசடி வழக்கில் தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள சந்துருஜி தனது முகநூலில் விடியோ பதிவை திங்கள்கிழமை மாலை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
   புதுவையில் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்களைத் தெரிந்துகொண்டு, பின்னர் போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
   இந்த வழக்கை புதுவை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். முக்கிய எதிரியான முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சந்துருஜி தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டார்.
   சந்துருஜியை பிடித்தால்தான் வழக்கில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது, எவ்வளவு தொகை திருடப்பட்டது என்ற விவரம் தெரியும் என்பதால், தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்யும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
   100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை சந்துருஜி பயன்படுத்தி வருவதால், அவரைக் கைது செய்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பதுங்கியிருக்கும் அவர், அவ்வப்போது இருப்பிடத்தையும் மாற்றி வருகிறார்.
   இந்த நிலையில், தலைமறைவு எதிரியான சந்துருஜி தனது முகநூலில் திங்கள்கிழமை மாலை தனது விடியோ பதிவை வெளியிட்டார்.
   அதன் விவரம் வருமாறு:
   புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். பிளஸ் 2 படிக்கும்போதே மலிவு விலை துணிகளை வாங்கி அவற்றை இஸ்திரி செய்து விற்பனை செய்தேன். பின்னர், வங்கியில் கடன் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டு படிக்கும்போதே பெங்களூரு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்குச் சென்று ஆயத்த ஆடைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்தேன். அதில் ஓரளவுக்கு லாபம் கிடைத்தது.
   படிப்பில் பெரிய அளவில் சோபிக்காததாலும், வியாபாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதாலும் சென்னையில் சுற்றுலா வாகன நிறுவனம் நடத்தினேன். பின்னர், புதுச்சேரியில் மனை வணிகத்தில் ஈடுபட்டேன். அதில் நல்ல லாபம் கிடைத்தது. எனது தந்தை அரசியல்வாதியாக இருந்ததால், அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றினேன்.
   எனக்குக் கிடைத்த வருவாயில் 30 முதல் 40 சதவீதம் வரை அரசியல் பணிக்காக செலவு செய்தேன்.
   ஓராண்டுக்கு முன்புதான் எனக்குத் திருமணம் நடந்தது. வீடு, திருமணக் கடன், பொறியியல் படிப்புக்காக வாங்கிய வங்கிக் கடன் ஆகியவை நிலுவையில் உள்ளன. இதுவரை செய்த தொழிலில் கிடைத்த வருவாய்க்கு முறையாக வருமான வரி கட்டியுள்ளேன். அரசியல் ரீதியாக நான் வளர்ந்து வருவதைப் பிடிக்காத சிலர் இந்த வழக்கில் எனது பெயரைத் தொடர்புபடுத்தி பெரிதாக்கிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார் சந்துருஜி.
   இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, இந்த முகநூல் சந்துருஜி உடையதுதான். இருப்பினும், அந்தப் பதிவில் இருப்பது சந்துருஜியின் குரலா அல்லது வேறு யாருடையதா என்பது குறித்தும், இந்தப் பதிவு எந்த ஊரில் இருந்து பதிவேற்றப்பட்டது என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் சந்துருஜியை கைது செய்வோம் என்றனர்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai