Enable Javscript for better performance
கட்செவி அஞ்சலில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை- Dinamani

சுடச்சுட

    

    கட்செவி அஞ்சலில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை

    By  புதுச்சேரி  |   Published on : 12th June 2018 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்செவி அஞ்சலில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
     புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
     புதுவையில் கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை ஆகிய சமூக ஊடகங்கள் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, செய்திகளை வெளியிடுவது தொடர் நிகழ்வாக உள்ளது.
     இதற்கிடையே, அமைச்சரவை முடிவு செய்து, சமூக வலைதளங்களில் யார் எந்த அறிவிப்பு கொடுத்தாலும், அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.
     இதனிடையே, பொதுமக்கள் தங்கள் புகார்களை கட்செவி அஞ்சல் மூலம் கொடுத்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். இதன்மூலம், தனக்கு நிர்வாகம் தெரியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். துணைநிலை ஆளுநர் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறைச் செயலர், தலைமைச் செயலர், அமைச்சர், முதல்வர் என ஒப்புதல் பெற்றுத்தான் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
     கட்செவி அஞ்சல் புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறை அல்ல. அரசு நிர்வாகத்துக்கு என்று தனியாக விதிமுறை உள்ளது. அரசின் அந்த விதிமுறையை ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன்.
     ஆளுநருக்கு புகார் வந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநரே நேரடியாக நடவடிக்கை எடுப்பது விதிமுறைகளுக்கு ஏற்புடையதல்ல. முதல்வருக்கு நிலை ஆணை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. அதன்படி, நிலை ஆணை 23-இன் அடிப்படையில் எந்தத் தகவல்கள், உத்தரவுகள், கடிதங்கள், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செயலருக்கு வருகிறதோ அதை துறை அமைச்சரிடம் கலந்து பேசி அதற்குப் பிறகுதான் அவர் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டும். நேரடியாக அன்றாட நிர்வாகத்தில் தலையிட மாநில நிர்வாகிக்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளேன்.
     உள்துறை அமைச்சகமும் அன்றாட நிர்வாகத்தில் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும்தான் அதிகாரம் உள்ளது என கடிதம் அனுப்பியுள்ளது. இதை முழுமையாக அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன். விதிமுறை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலை ஆணை ஆளுநர், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஜூன் 8-ஆம் தேதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
     கட்செவி அஞ்சலில் 100-க்கு 50 சதவீதம் தவறான தகவல்கள்தான் வருகின்றன. இந்தத் தகவல்களை யார் அனுப்பினார் என்ற உண்மைத் தன்மையை அறிய சர்வரை பார்க்க அமெரிக்காவுக்குத் தான் போக வேண்டும்.
     ஆளுநர் கிரண் பேடி தனிப்பட்ட முறையில் கட்செவி அஞ்சல் குழுக்களை வைத்துக் கொள்ளலாம். அரசு நிர்வாகம் என்று சொல்லும்போது விதிமுறையின்படித்தான் செயல்பட வேண்டும்.
     பிரதமர் அலுவலகத்திலும், தமிழக முதல்வர் அலுவலகத்திலும் கட்செவிஅஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறதா? என்றார் முதல்வர் நாராயணசாமி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai