Enable Javscript for better performance
புதுவையில் குறையுது அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்: ஆளுநர் தலையிட பாஜக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் குறையுது அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்: ஆளுநர் தலையிட பாஜக வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு எம்பிபிஎஸ் இடங்கள் குறைவதால் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நேரடியாக தலையிட்டு எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் வலியுறுத்தினார்.
     இதுகுறித்து, புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
     புதுவையில் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு முதல் முறையாக இந்த ஆண்டு ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது பாராட்டக்கூடியது. ஆனால், இது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி ஏதும் அளிக்கவில்லை.
     அதுபோல, பாடவாரியாக மதிப்பெண்களை பதிவு செய்ததில் தவறு இருந்தால் திருத்தம் செய்யும்போது குளறுபடிகள் வருகின்றன.
     விண்ணப்பிக்கும்போதே இவ்வளவு குளறுபடிகள் என்றால் கலந்தாய்வில் எத்தனை குளறுபடிகள் நடைபெறுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
     எனவே, இந்த ஆண்டு சென்டாக் கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது பதிவு செய்ய மேலும் 10 நாள்கள் நீட்டிப்பு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் பதிவை கொண்டுவர வேண்டும்.
     புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 283 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்டன. ஆனால், அது கடந்த ஆண்டு 165 ஆக குறைந்தது. நிகழாண்டு 100 இடங்கள் கிடைப்பதே சந்தேகம் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
     பிற மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறும் நிலையில், புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் 35 சதவீதம் வரையே பெறப்படுகின்றன.
     பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமே கல்விக் கட்டணமாக வாங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரியில் இந்த ஆண்டு ரூ.1.37 லட்சமாக கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் கல்விக் கட்டணம் ரூ.1 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழைகள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
     மகாத்மா காந்தி நிகர்நிலை பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி புறம்போக்கு இடங்களில் கட்டடங்களை கட்டியுள்ளது. இதற்கு எந்த வகையில் அனுமதி தரலாம் என்பதை முடிவு செய்வதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. ஆனால், குறைந்துவரும் மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்காக அமைச்சரவை கூட்டப்படவில்லை.
     மருத்துவக் கல்லூரிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை அரசு நிறுத்தினாலே அவைகள் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாறாது. ஆனால், ஊழலுக்காக தடையில்லா சான்று வழங்கி கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றி வருகின்றனர்.
     ஏழை மணவர்கள் அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து மருத்துவம் படிக்கும் கனவு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
     எனவே, ஆளுநர் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு பெறும் விஷயத்தில் தலையிட்டு கூடுதல் இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சாமிநாதன். பேட்டியின்போது கட்சியின் ஓபிசி பிரிவு பொதுச் செயலர்கள் அகிலன், சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai