Enable Javscript for better performance
மத்திய அரசின் இணைச் செயலர்களை நேரடியாக நியமிக்க புதுவை முதல்வர் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் இணைச் செயலர்களை நேரடியாக நியமிக்க புதுவை முதல்வர் எதிர்ப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 12th June 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலர்களை நேரடியாக நியமிக்கும் திட்டத்துக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
     புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
     மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலர்களை நேரடியாக நியமிப்பது தொடர்பாக ஒரு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
     மத்திய அரசுத் துறையின் இணைச் செயலராக வருவதற்கு அனுபவத் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகும் பல கட்ட நடைமுறைகளைத் தாண்டித் தான் இணைச் செயலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
     குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இணைச் செயலராகப் பதவி உயர்வு பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு நேரடியாக இணைச் செயலரைத் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது நிர்வாகத்தின் அங்கங்களாக உள்ள அதிகாரிகளின் பாரம்பரியத்தை அழிப்பதாகும்.
     ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற பிறகு மத்திய, மாநில அரசுகளில் விதிமுறைகளைப் படித்து, கோப்புகளைத் தயார் செய்து, முடிவு எடுக்கும் அளவில் அமைச்சர்களுக்கும், முதல்வர்களுக்கும் கோப்புகளை அனுப்பும் வேலைகளில் இணைச் செயலர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் அவர்களின் பங்கு முக்கியமானதாகும்.
     மத்திய அரசு தொடர்ந்து அரசின் பல அமைப்புகளைச் சீர்குலைத்து வருகிறது. மத்திய திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
     சில திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்ட மானியத்தை குறைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
     அதுமட்டுமன்றி சிபிஐ, வங்கி, அமலாக்கப் பிரிவு ஆகியவை மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் நிலையைக் கொண்டு வந்துள்ளனர். இதில் வருமான வரித் துறையும் விடுபடவில்லை. நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாட்டிலும் மத்திய அரசு தலையிட முயற்சித்து வருகிறது.
     ஆனால், அதை நீதிபதிகள் எதிர்த்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இணைச் செயலர் பதவிக்கு தேர்வு ஏதுமின்றி, நேரடியாக நியமிப்பது என்பது விதிமுறைகளை மீறியதாகும். ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நேரடியாக இணைச் செயலர்கள் நியமிக்கப்பட்டால் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கான மரியாதை குறைந்துவிடும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai