Enable Javscript for better performance
அமைச்சர்களுடன் புதுவை முதல்வர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநிலத்தின் 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக முதல்வர் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.
     புதுவையில் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
     முன்னதாக, துணைநிலை ஆளுநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
     முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தால் மார்ச் மாதமே தாக்கல் செய்யப்படும். காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சில மாதங்களில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
     கடந்த 7 ஆண்டுகளாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான், புதுவையில் முழுநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
     அந்த வகையில், நிகழாண்டும் முதல்வர் நாராயணசாமி கடந்த மார்ச் 26-ஆம் தேதி 4 மாதச் செலவினங்களுக்காக ரூ.2,468 கோடிக்கு இடைக் கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
     அதையடுத்து, கடந்த ஏப்.27-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மாநில திட்டக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, ரூ.7,530 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில், ஜூன் 4-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று 5-ஆம் தேதி பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற மத்திய உள்துறை, நிதி அமைச்சகங்களின் அதிகாரிகளை முதல்வர் நாராயணசாமி கடந்த 6, 7-ஆம் தேதிகளில் சந்தித்தார். இதையடுத்து, ஓரிரு நாளில் நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இருப்பினும், செவ்வாய்க்கிழமை வரை நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை.
     இதனிடையே, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், மு.கந்தசாமி, ஷாஜகான், இரா. கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, நிதித் துறைச் செயலர் கந்தவேலு மற்றும் அரசுச் செயலர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
     நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், அரசுத் தரப்பில் கூட்டம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai