Enable Javscript for better performance
காதல் தகராறில் இளைஞரை கொலை செய்ய முயற்சி: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காதல் தகராறில் இளைஞரை கொலை செய்ய முயற்சி: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

    By  புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காதல் தகராறில் இளைஞரை கொலை செய்ய முயன்றதாக 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை முத்தியால்பேட்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     புதுச்சேரி சாமிப்பிள்ளைத் தோட்டம் வாஞ்சிநாதன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பார்த்திபன் (21). பிகாம் பட்டதாரியான இவர், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். பகுதி நேரமாக முத்தியால்பேட்டையில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
     திங்கள்கிழமை இரவு முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பார்த்திபனை வழிமறித்து தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க பார்த்திபன் ஓடத் தொடங்கினார். அவர் ஓடிக் கொண்டிருக்கும்போதே, மேலும் 3 சிறுவர்களும் பார்த்திபனை பின்தொடர்ந்து துரத்தினர்.
     அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் பார்த்திபன் தவறி கீழே விழுந்தபோது பின்தொடர்ந்து வந்த நபர்கள் பார்த்திபனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
     இதில் பார்த்திபனின் தலை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் மயங்கினார்.
     பின்னர் அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
     மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். முதலில் பார்த்திபன் இறந்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர்.
     இதுகுறித்து தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து மயங்கிக் கிடந்த பார்த்திபனை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ஹரி, மோகன், சிரஞ்சீவி மற்றும் சிறுவர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பார்த்திபன், முத்தியால்பேட்டை பகுதியில் ஓர் இளம்பெண்ணை காதலித்து வந்தாராம். அதே பெண்ணை ஹரியும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
     சில நாள்களுக்கு முன்னர் பார்த்திபன் அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது, அதை ஹரியின் நண்பர்கள் புகைப்படம் எடுத்து அவரிடம் காட்டியுள்ளனர்.
     இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
     இதன் காரணமாக அவரை கொலை செய்ய திட்டமிட்டு வெட்டியதாகக் கூறப்படுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai