Enable Javscript for better performance
குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக புதுவை மாற வேண்டும்: நீதிபதி சோபனாதேவி- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக புதுவை மாற வேண்டும்: நீதிபதி சோபனாதேவி

    By  புதுச்சேரி,  |   Published on : 13th June 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக புதுவை மாற வேண்டும் என்று மாவட்ட நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலருமான சோபனாதேவி வேண்டுகோள் விடுத்தார்.
     புதுவை அரசு தொழிலாளர் துறையின், தொழிலாளர் அதிகாரி (நலத் திட்டங்கள்) சார்பில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்க காந்தி நகர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கருத்தரங்கத்தை தொடக்கிவைத்து நீதிபதி சோபனாதேவி பேசியதாவது: பெண் குழந்தைத் தொழிலாளர்களை மீட்க பெண் போலீஸார் இருக்க வேண்டும் என்று சட்டத்திலேயே உள்ளது.
     புதுவையில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக புதுவை உருவாக வேண்டும். குழந்தைத் தொழிலாளர் தொடர்பான நூல்கள் தமிழில் உள்ளன. அவற்றை அனைவரும் வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
     முக்கியமாக சிறுவர்கள் இந்த நூல்களை படிக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் குறித்து தெரியவந்தாலோ, சந்தேகம் வந்தாலோ 1098 என்ற எண்ணில் புகார் செய்யலாம். மேலும், சட்ட சேவை மையம் 24 மணி நேரமும் இயங்குகிறது. மையத்துக்கு இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
     குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடுமையான சட்டங்கள் இருந்தாலும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. சம்பந்தப்பட்ட துறைகளுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால் இதுபோன்றவைகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றார்.
     தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் பேசியதாவது: பள்ளிகளில் இடைநிற்றல் தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக காரணமாகிறது. புதுவையை பொருத்தவரை பள்ளி இடைநிற்றல் 1000 பேருக்கு 250-ஆக இருந்தது 28-ஆக குறைந்துள்ளது. பெற்றோர் தங்களின் வருமானம் போதாத சூழ்நிலையில் குடும்பத்தை நடத்த குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.
     குறிப்பாக, தனியாக இருக்கக்கூடிய தாய்மார்கள் குழந்தைகளை அதிகளவில் வேலைக்கு அனுப்புகின்றனர்.
     புதுவையில் கண்டறியப்படும் குழந்தைத் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் புதுவையைச் சேர்ந்தவர்கள்அல்ல. வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் அதிகளவு தனியாக வந்து வேலை செய்கின்றனர். வறுமைக்கு தீர்வு காண்டால்தான் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
     முன்னதாக, கருத்தரங்கில் தொழிலாளர் துறை துணை ஆணையர் முத்துலிங்கம் வரவேற்றார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் யஷ்வந்தையா, பள்ளிக் கல்வி துணை இயக்குநர் கலைச்செல்வன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர் துறை அதிகாரி சகுந்தலா நன்றி கூறினார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai