Enable Javscript for better performance
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்: திருச்சி சிவா எம்.பி.- Dinamani

சுடச்சுட

    

    திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்: திருச்சி சிவா எம்.பி.

    By  புதுச்சேரி  |   Published on : 14th June 2018 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tsiva

    திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று திமுகவின் கொள்கை பரப்புச் செயலர் திருச்சி என்.சிவா எம்.பி. பேசினார்.
     புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் அரசு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
     இதில் பங்கேற்க வந்த திருச்சி என்.சிவா எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருவள்ளூர் சேர்வாய்கண்டிகை என்ற இடத்தில் இரண்டு ஏரிகளை ஒன்றாக இணைத்தால் சென்னைக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
     ஆந்திர மாநிலத்தில் ரூ.1,500 கோடி செலவில் இரண்டு பெரிய நதிகளை இணைத்து ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை பாசன நிலமாக மாற்றியதுடன், குடிநீருக்கும் வழிவகை செய்துள்ளனர். ஆனால், சென்னை நகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு முன்வரவில்லை.
     திமுக ஆட்சி மலர்ந்தால்தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கர்நாடக அரசு இதுவரை காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காதது தொடர்பாக வெளிப்படையான கருத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
     விழாவுக்கு, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான இரா.சிவா தலைமை வகித்தார்.
     பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிவா எம்.பி. பரிசுகளை வழங்கினார்.
     பத்தாம் வகுப்புத் தேர்வில் இத்தொகுதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முறையே 3 கிராம், 2 கிராம், 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும், பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
     பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு மடிக்கணினி, கைக்கடிகாரம், சுவர் கடிகாரம், புத்தகப் பை, உணவு டப்பா ஆகியவை வழங்கப்பட்டன. 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே 3 கிராம், 2 கிராம் தங்க நாணயங்களுடன் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
     இவை தவிர, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தலா 3 பேருக்கு ஆறுதல் பரிசுகளாக தலா ரூ.2,500 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ரூ.1,000 மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai