புதுச்சேரியில் 100 அடி சாலை முழு பயன்பாட்டுக்கு திறப்பு
By புதுச்சேரி, | Published on : 14th June 2018 09:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் 100 அடி சாலை புதன்கிழமை முழு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
புதுச்சேரி 100 அடி சாலையில் ரயில்வே கடவுப்பாதை காரணமாக மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்புடன், ரூ.35.72 கோடி செலவில் கடந்த 2013-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. புதுச்சேரி-கடலூர் மார்க்கத்தில் 4 வழி பாலமும், இப்பாலத்தில் இருந்து அரும்பார்த்தபுரம் புறவழிச் சாலைக்கு தனிப் பாலமும் கட்டப்பட்டன.
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இப்பணிகள், தற்போது காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன் விரைவுப்படுத்தப்பட்டன.
4 வழிப் பாதையில் கிழக்குப் பகுதி முடிந்து கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது. இதில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்தாலும், முழுபாலமும் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே, மேற்குப் பகுதி பாலம் கட்டுமானப் பணிகள் மணல் தட்டுப்பாட்டு காரணமாக தாமதம் ஆனது. இருப்பினும், மிகுந்த சிரமங்களுக்கு இடையே இப்பணிகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேம்பாலத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி மட்டுமே பாக்கி உள்ளது.
இதனால், ஜூன் மாத இறுதியில் பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், 100 அடி சாலையின் இருபுறமும் மக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை காலை திறக்கப்பட்டது. கடலூர் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்குப் பகுதி பாலம் வழியாக கடந்து சென்றன.
பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை உதவிப் பொறியாளர் சிவபாலன் ஆகியோர் பாலத்தை திறந்து வைத்தனர்.
முறையான அறிவிப்பு இன்றி பாலம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்று குழப்பம் அடைந்தனர். விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாலத்தில் இருந்து இந்திரா காந்தி சிலை வரை சாலையில் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாலம் திறக்கப்பட்டதால் இனி கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் பேருந்துகள் 100 அடி சாலையை கடந்து இந்திரா காந்தி சாலையில் திரும்பி புதுச்சேரி பேருந்து நிலையத்துக்குச் செல்லும்.
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் பேருந்துகள் வழக்கமான பழைய கடலூர் சாலை வழியாகச் செல்லும்.