Enable Javscript for better performance
புதுவையில் நீர் வளத்தை பாதுகாக்க இணைந்து செயல்பட முதல்வருக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் நீர் வளத்தை பாதுகாக்க இணைந்து செயல்பட முதல்வருக்கு அழைப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 14th June 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் நீர்வளத்தை பாதுகாக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் வே.நாராயணசாமிக்கு, நீதி ஆயோக் அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் அமிதாப் கான்ட் அழைப்பு விடுத்துள்ளார்.
     இதுகுறித்து முதல்வர் நாராயணசாமிக்கு, அவர் ஜூன் 11-ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
     கூட்டாட்சியைப் பின்பற்றி வரும் நீதி ஆயோக் பல்வேறு சமூக துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த குறியீடுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் முற்போக்கான இந்தியாவுக்கு ஆரோக்கியமான மாநிலங்கள் என்ற தலைப்பில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.
     அடுத்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திறமையான நீர் மேலாண்மையை கொண்டுவரும் நோக்கில் கலப்பு நீர் மேலாண்மை குறியீடு தயாரித்துள்ளோம். இதில் பங்கேற்க நீதி ஆயோக் பல தகவல்களை கேட்டு, புதுவை அரசுக்கு பல தடவை கடிதம் எழுதியது. மேலும், தொலைபேசி மூலமும் மின்னணு சாதனங்கள் மூலமும் தொடர்பு கொண்டது. ஆனாலும் தகவல்கள் கிடைக்கவில்லை.
     இதனால் அந்த அறிக்கையில் புதுவை விடுபட்டுவிட்டது. தற்போது, புதுவை 200 மில்லியன் கன மீட்டர் நீரை கொடுத்து வருகிறது. அதேசமயம், 2020-ஆம் ஆண்டில் 248 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் தேவை என்ற சவால் உள்ளது. அதை எதிர்கொள்ள நீதி ஆயோக்குடன் இணைந்து இந்த ஆண்டு முதல் பணியாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
     ஆளுநர் வேண்டுகோள்: இந்தக் கடிதத்தின் நகலை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு, புதுவையில் நீர் வளத்தை அதிகப்படுத்த அனைவருக்கும் பங்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்யாமல் நீரை பாதாளத்துக்கு தள்ளிவிடக்கூடாது, நீர் வளத்தை அதிகரிக்க அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai