Enable Javscript for better performance
வீடு கட்ட வழங்கிய இடத்தில் வணிக வளாகம் கட்டிய எம்எல்ஏக்கள்: ஆளுநர் கிரண் பேடியிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    வீடு கட்ட வழங்கிய இடத்தில் வணிக வளாகம் கட்டிய எம்எல்ஏக்கள்: ஆளுநர் கிரண் பேடியிடம் புகார்

    By  புதுச்சேரி,  |   Published on : 14th June 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீடு கட்ட வழங்கிய இடத்தில் வணிக வளாகம் கட்டிய எம்.எல்.ஏ.க்கள் குறித்து, ஆளுநர் கிரண் பேடியிடம், ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
     அந்த அமைப்பின் தலைவர் ரகுபதி புதன்கிழமை அனுப்பியுள்ள புகார் மனு:
     புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறையினரால் பூமியான்பேட்டை ஜவஹர் நகரில் நில ஆர்ஜிதம் மற்றும் மேம்பாட்டுத் திட்ட விதி 1969-க்கு உள்பட்டு 47 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வீட்டு மனை அளிக்கப்பட்டுள்ளது.
     ஆனால், இவர்கள் இந்த மனைகளை பெற்றுக் கொள்ள வசதியாகவும், இவர்களுக்கு சாதகமாகவும் இந்தச் சட்ட விதிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளின் துணையோடு 2, 3 திருத்தம் செய்துள்ளனர்.
     ஆனால், இவர்கள் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை. குறிப்பாக, குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த மனைகளை பெரும்பாலானோர் அரசின் அனுமதி பெறாமலும், அரசிற்கு செலுத்த வேண்டிய ஈவுத் தொகையை செலுத்தாமலும் விற்பனை செய்துள்ளனர். இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
     மேலும், பலர் குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த வீட்டு மனைகளை விதிகளை முற்றிலும் மீறி அந்த வரைபடத்தின் படியும் அல்லாமல் 3 மீட்டர் அகலமுள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர்.
     மனையை பெற்ற 5 ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும். இல்லையென்றால் காலி மனை அரசால் கையகப்படுத்தப்படும் என விதி உள்ளது. இருப்பினும், பலர் இன்றளவும் காலிமனையாகவே வைத்துள்ளனர்.
     இது தொடர்பாக நகர அமைப்புத் துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தாங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மனைகளை நேரில் ஆய்வு செய்து விதிகள் மீறப்பட்ட அனைத்து மனைகளின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai