Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி 30 இடங்களில் பிரசாரக் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி 30 இடங்களில் பிரசாரக் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 15th June 2018 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி புதுச்சேரி, காரைக்காலில் 30 இடங்களில் பிரசாரக் கூட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் அ.மு.சலீம் தெரிவித்தார்.
     புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
     தனியார் பள்ளிகள் அரசின் கட்டண நிர்ணயக் குழு நியமித்தபடி கட்டணத்தை வசூலிக்காமல், அதிகளவு கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வி கட்டணத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், அதனடிப்படையில் புதுவை சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியதை மீறியும் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
     கேரளத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடனில் 50 சதவீதத்தை மாநில அரசே திருப்பிச் செலுத்தியுள்ளது. அதுபோல, புதுவை அரசும் மாணவர்களுக்கான கல்விக் கடனில் 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும். குயில்தோப்பு இடப் பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மோசடியான வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிலத்தைப் பதிவு செய்தவர்கள் மீதும் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
     உள்ளாட்சித் தேர்தலை 8 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததில் இருந்து 5 வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால், புதுவை அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை. உடனடியாக வார்டுகளையும், இட ஒதுக்கீட்டையும் வரையறை செய்து, தேர்தல் ஆணையரை நியமித்து தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.
     இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற ஜூன் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் 30 இடங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
     பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஜூன் 20-ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெறும் என்றார் சலீம். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, அபிஷேகம், சுப்பையா, தனராமன், சேது செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai