Enable Javscript for better performance
கிராமங்களில் தண்ணீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளிக்க ஆளுநர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    கிராமங்களில் தண்ணீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளிக்க ஆளுநர் வேண்டுகோள்

    By  புதுச்சேரி  |   Published on : 15th June 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராமங்களில் தண்ணீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வேண்டுகோள் விடுத்தார்.
     இதுகுறித்து தனது கட்செவி அஞ்சல் மூலம் வியாழக்கிழமை அவர் பதிவிட்ட செய்திக் குறிப்பு:
     நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நீர் சேகரிப்பு அத்தியாவசியமாக உள்ளது. துப்புரவு, எரிவாயு, மின் இணைப்பு, சாலை வசதி, சுகாதாரம், காப்பீடு, திறன் மேம்பாடு, பண்ணை வருமானம் இவற்றுடன் தண்ணீர் சேகரிப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
     ஏனென்றால், தண்ணீர் இன்றி எதையும் செய்ய முடியாது. புதுவை மாநிலத்தில் மட்டுமல்ல; நாட்டுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் அனைவருக்கும் தண்ணீரை சேகரிக்கும் கடமை உள்ளது. இதற்காக தனிப்பட்ட முறையில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். இல்லையென்றால், வசதியானவர்கள், ஏழைகளுக்கு இடையே பிளவு அதிகரிக்கும்.
     வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து பாதுகாப்பான குடிநீர் பெற்றுக் கொள்ள முடியும். ஏழைகள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும்படி விடப்படுவார்கள். எனவே, கிராமங்களில் நீர் சேமிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
     வேளாண் துறை, உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அறிவியல், தொழில்நுட்பத் துறை, பொதுப் பணித் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்கள், நபார்டு வங்கி ஆகியவை நீர் சேமிப்பில் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அவை இலக்குகளை அமைத்து செயல்பட வேண்டும்.
     பலர் நீரின்மையால் தாங்கள்தான் முதலில் பாதிக்கப்படுவோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் குழாய்கள், கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைத் திருடி விற்பனை செய்கின்றனர். இதற்கு மக்கள் புகார்கள் அளிப்பதற்குப் பதிலாக பயனுள்ள முயற்சிகளை எடுக்க வேண்டும்.
     நிலத்தடி நீர் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், கூட்டாகவே பாதிக்கப்படுவோம். சிலர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது சுத்தமான நீர் கிடைக்காததால் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
     இதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும் என தனது கட்செவி அஞ்சலில் ஆளுநர் கிரண் பேடி பதிவிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai