Enable Javscript for better performance
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு முட்டுக்கட்டை: முதல்வர் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு முட்டுக்கட்டை: முதல்வர் குற்றச்சாட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
     இதுகுறித்து புதுவை சட்டப்பேரவையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
     மத்திய நிதிக் குழுவில் தில்லி, புதுவை ஆகிய மாநிலங்கள் சேர்க்கப்படவில்லை. யூனியன் பிரதேச நிதிக் குழுவிலும் புதுவை சேர்க்கப்படவில்லை. இப்படி திரிசங்கு நிலையில் வைத்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட முடியுமோ, அந்த அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆளுநர்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகிறது.
     மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் பரிந்துரைபடிதான் செயல்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்து, விதிகளை மீறிச் செயல்பட்டு வருகிறார். இதை பிரதமர், உள்துறை அமைச்சர்களிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
     அதிகாரமே இல்லாத ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதிகாரிகளை அழைத்து துறை வாரியாக பேசுவதற்கும், தன்னிச்சையாக உத்தரவுகளை இடுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. விதிமுறைகளை மீறியும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
     மேலும், அதிகாரிகளை மிரட்டுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பில் இருக்கும் அதிகாரிகளை தன்னுடன் வர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறார். அவருக்கு விளம்பரத்தில் நாட்டம் உள்ளது. புதுவை மாநிலத்தின் மீதோ, மக்களின் மீதோ அக்கறை இல்லை என்றார் முதல்வர் நாராயணசாமி.
     அப்போது, தில்லியில் முதல்வர் கேஜரிவால் போராட்டம் நடத்துவது போல, நீங்கள் போராட்டம் நடத்துவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாகரிகம் கருதி சட்ட விதிமுறைப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எங்களை அந்த நிலைக்குத் தள்ளினால் நாங்களும் போராடத் தயாராக உள்ளோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றார் முதல்வர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai