Enable Javscript for better performance
நிதி நெருக்கடியை உருவாக்கி புதுவை அரசை முடக்க மத்திய அரசு முயற்சி: அதிமுக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    நிதி நெருக்கடியை உருவாக்கி புதுவை அரசை முடக்க மத்திய அரசு முயற்சி: அதிமுக குற்றச்சாட்டு

    By  புதுச்சேரி,  |   Published on : 16th June 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் நிதி நெருக்கடியை உருவாக்கி, அதன் காரணமாக புதுவை அரசை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.
     இதுகுறித்து புதுவை சட்டப்பேரவையில் தனது அலுவலகத்தில் பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     துணைநிலை ஆளுநர் தலைமையில் 2 மாதங்களுக்கு முன் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து மதிப்பு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்காதது, புதுவை மாநிலத்தில் திட்டமிட்டு நிதி நெருக்கடியை உருவாக்கி அதன் மூலம் ஆளும் அரசை கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது தெள்ளத் தெளிவாகிறது.
     மத்திய அரசின் இந்த தவறான எண்ணத்தை நிறைவேற்றுவதில் துணைநிலை ஆளுநருக்கும் தொடர்புள்ளது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி உடனே தில்லி சென்று அனுமதி வாங்கி வருவேன் என கூறிவிட்டு, ஏதோ ஒரு துறையின் இணைச் செயலரை சந்தித்துவிட்டு அனுமதி வரும் எனக் கூறுவது கேலிக் கூத்தான செயல்.
     அதுமட்டுமல்லாமல், திட்டக் குழுவின் முடிவின்படி நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமலேயே துறை ரீதியாக அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைச் செயலர்களை அழைத்து துறை ரீதியான ஒதுக்கீடுகள் தொடர்பாக பேசுவது சிறுபிள்ளைத்தனமான செயல்.
     மத்திய பாஜக அரசிடம், புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படாத தன்மையால் மாநில உரிமையை விட்டுக் கொடுக்க கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
     இந்தச் செயலை கட்சி வித்தியாசமின்றி அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மை குறித்தும், மாநிலத்தின் செயற்கையான நிதி நெருக்கடியை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் ஆட்சியைக் கலைக்கக்கூடிய மத்திய அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இது ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலத்துக்கு விடப்பட்ட சவால்.
     இதற்கு தார்மிக பொறுப்பேற்று மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். ஏதேதோ காரணங்களுக்காகப் போராட்டம் நடத்திய முதல்வர், நிதிநிலை அறிக்கைக்கு அனுமதி பெறமுடியாததற்கு என்ன செய்ய போகிறார்?
     துணைநிலை ஆளுநர் மாளிகையிலோ, தில்லிக்கோ சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை?
     புதுவையை பொருத்த வரை ஆளுநர், முதல்வரின் தொடர் மோதல் போக்கால் காவல் துறையின் ஒட்டுமொத்த நிர்வாகமே சீரழிந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 21 காவல் துறை கண்காணிப்பாளர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
     காவல் ஆய்வாளர் பணியிடங்களில் 21 இடங்களும், காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களில் 30 இடங்களும், காவல் உதவித் துணை ஆய்வாளர் பணியிடங்களில் 35 இடங்களும் காலியாக உள்ளன. துறை ரீதியாக கூட்டம் கூட்டப்பட்டு அதில் எந்த முடிவும் எடுக்கப்படாததற்கு ஆளும் காங்கிரஸ் அரசு - துணைநிலை ஆளுநரின் போட்டி மனப்பான்மையே காரணம் என்றார் அன்பழகன்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai