Enable Javscript for better performance
புதுவைக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து: முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவைக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து: முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

    By  புதுச்சேரி  |   Published on : 16th June 2018 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவைக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
     இதுதொடர்பாக அவர், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:
     தில்லியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னையில் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் துணைநிலை ஆளுநர் தலையிடுகிறார். இதனால், அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
     தில்லி துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் கேஜரிவாலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கெடுபிடிப் போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 4 நாள்களாக, தில்லி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேஜரிவாலும், அவருடைய அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
     புதுவை மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலையிடுகிறார். கோப்புகளைத் திருப்பி அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறிச் செயல்படுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
     இவ்வாறான செயல்களுக்குத் தூண்டுதலாக இருப்பது மத்திய பாஜக அரசுதான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே புதுவை மாநிலத்துக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கிறோம்.
     மத்திய அரசு தனக்குத் தேவைப்படும் போதெல்லாம் சட்டப்பேரவை உள்ள புதுவை, தில்லி யூனியன் பிரதேசங்களை மாநிலங்கள் என்று அங்கீகரிக்கிறது. தனக்கு அரசியல் லாபம் இல்லையென்றால், யூனியன் பிரதேசங்களாக கருதுகிறது.
     தில்லி அரசுக்கு நிலம், சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம், நிதி ஆகியவை தொடர்பாக முடிவு செய்ய அதிகாரம் இல்லை. ஆனால், புதுவை மாநில அமைச்சரவைக்கு இந்த அதிகாரங்கள் உண்டு. புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசின் தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளோம்.
     தற்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தில்லி, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். சரக்கு }சேவை வரி செலுத்துவதில் மட்டும் புதுவையும், தில்லியும் மாநிலங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி. பேட்டியின்போது, எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் உடனிருந்தார்.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai