தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லையென்றால் கடும் நடவடிக்கை
By DIN | Published on : 17th June 2018 02:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லையென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எச்சரித்தார்.
புதுவையில் நிலத்தடி நீரைச் சேமிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
புதுவையில் சில தொழில் நிறுவனங்களில் அதிகமான அளவு நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான தொழிற்சாலைகள் மழைநீரையும் சேகரிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் அதிக அளவு நிலத்தடி நீரை எடுப்பதால் நீர்மட்டம் குறைந்து, கடல் நீர் உள்ளே புகுந்து விடும். இதனால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
மழைநீரைச் சேகரிக்கும் பொறுப்பு அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் உள்ளது. அது புதுவையை வளமாக்கும் முயற்சியாகும். நிலத்தடி நீரைச் சேகரிக்கவில்லை என்றால், எதிர்கால சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்படுவர்.
தொழில்துறை அதிகாரிகள் ஒவ்வொரு தொழிற்சாலைகளையும் கண்காணிக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் இல்லையென்றால் அந்தத் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.